ஆன்லைன் கடன் செயலிகளில் கடன் வாங்கி பலரும் இன்னலுக்கு உள்ளாகி வரும் நிலையில், ஏராளமானோர் தங்களது உயிரையும் மாய்த்துக் கொள்கின்றனர்
இன்றைய உலகில், நிதித் தேவைகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. மருத்துவ அவசரநிலை, சுற்றுலா, வீடு வாங்க, புதுப்பிக்க, உயர்கல்வி, அன்றாடத் தேவை என எதுவாக இருந்தாலும் கடன்கள் வழங்கப்படுகின்றன. இருப்பினும், கடன் வாங்கும் முன்பு ஒன்றுக்கு இருமுறை யோசித்து வாங்க வேண்டும். இவையெல்லாம் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மூலம் கொடுக்கப்படும் கடன்களுக்குத்தான். இதுதவிர, ஆன்லைன் செயலி மூலம் கடன் வழங்கும் நிறுவனங்களும் உள்ளன.
வங்கிகளில் கடன் வாங்குவதற்கு ஏகப்பட்ட நடைமுறைகள் இருப்பதால் பொதுமக்கள் பலரும் ஆன்லைன் லோன் செயலிகள் மூலமாக கடன் பெறுகிறார்கள். இவை, விரைவாக வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கி, தங்களது பொறிக்குள் விழ வைக்கின்றன. அதிலிருந்து மீள முடியாமல் பலரும் தங்களது உயிரை மாய்த்துக் கொள்கின்றன. ஆர்பிஐ அனுமதியுடன் இயங்கும் கடன் செயலிகள் தவிர, சட்டவிரோத மோசடி கடன் செயலிகளும் உள்ளன.
மேலோட்டமாக பார்த்தால் அலைச்சல், நடைமுறைகள் என எதுவும் இல்லாமல் எளிதாக கடன் கிடைப்பது போலத் தோன்றும். ஆனால், இந்த ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் கடன்களை வாங்க வேண்டாம் என அறிவுறுத்துகிறார்கள் நிதி ஆலோசகர்கள். ஆன்லைன் கடன் செயலிகள் மூலமாக கடன் வாங்குவதை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது என்று அவர்கள் கூறுகிறார்கள்.
தவிர்க்கக்கூடிய செலவுகளைக் கூட இதுபோன்ற செயலிகள் மூலம் எளிதாக கிடைக்கும் கடன் பணத்தை வாங்கி செலவு செய்து விட்டு, திருப்பி அளிக்க முடியாத பட்சத்தில் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகிறார்கள். சரியான நேரத்தில் பணம் செலுத்த முடியாமல் போனால், வட்டியும் அதிகமாகி சிக்கலில் மாட்டிக் கொள்ள நேரிடும் என அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
மேலும், ஆன்லைன் கடன் செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்யும் போதே, நமது போனில் உள்ள அனைத்து தகவல்களும் அவர்களுக்கு சென்று விடும். செயலியை பதிவிறக்கம் செய்யும்போது சில அனுமதிகளை உங்களிடம் கேட்பார்கள். பணம் கிடைக்கப்போகிறது என்ற மகிழ்ச்சியில் நாமும் அவை அனைத்துக்கும் ஓகே கொடுத்து விடுவோம். இதன் மூலம், நமது செல்போனில் இருக்கும் தொடர்பு எண்கள், புகைப்படங்கள் என அனைத்து தகவல்களும் மோசடி கும்பலின் கைக்கு சென்று விடும்.
எனவே, நீங்கள் பணம் செலுத்த தவரும் பட்சத்தில், அதனை வைத்து அவர்கள் உங்களை மிரட்டக் கூடும். உங்கள் புகைப்படங்களை மார்பிங் செய்து உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு அவர்கள் அனுப்பக் கூடும். இதனால், நீங்கள் அதீத மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும் என எச்சரிக்கிறார்கள் இதுகுறித்த விவரம் அறிந்தவர்கள்.
பொதுவாக பணத்தேவை இருப்பவர்கள் எச்சரிக்கையோடு இருக்க மாட்டார்கள் என சுட்டிக்காட்டும் உளவியல் நிபுணர்கள், பணத்தேவை இருந்தால் ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்ற வங்கிகள், நிதி நிறுவனங்கள் மூலமாக கடன் வாங்குவதே நல்லது என்கிறார்கள். மேலும், இதுகுறித்து காவல்துறையினரும் பல்வேறு எச்சரிக்கைகளையும், விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்து வருகிறார்கள். எனவே, பொதுமக்கள் அதற்குள் சென்று சிக்கி சிரமத்துக்குள்ளாக வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
0 கருத்துகள்