Hot Posts

6/recent/ticker-posts

நாமக்கல் மாவட்டத்தில், 2023 -ஆண்டு 79,327 எக்டர் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் சிறுதானிய உணவு விழிப்புணர்வு திருவிழாவை தொடங்கி வைத்து தகவல்.

நாமக்கல் மாவட்டம், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் மகளிர் கலை கல்லூரியில், உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் இன்று (29.12.2023) சிறுதானிய உணவு விழிப்புணர்வு திருவிழாவை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.பெ.ராமலிங்கம் அவர்கள் முன்னிலையில், சிறுதானிய உணவு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்ததாவது,
ஐக்கிய நாடுகள் அமைப்பு 2023-ம் ஆண்டை சிறுதானியங்களுக்கான சர்வதேச ஆண்டாக அறிவித்திருக்கிறது. உலகளவில் வங்கதேசம், கென்யா, நேபாள், நைஜீரியா, ரஷ்யா, செனகல் ஆகிய நாடுகளுடன் இணைந்து இந்தியா எடுத்த சிறப்பு முயற்சியின் காரணமாக சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக 2023 ஆண்டினை சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஐக்கிய நாடுகள் அமைப்பு 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சிறு தானியங்களின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், உணவு பாதுகாப்புத்துறை மற்றும் உணவு வழங்கல் துறை சார்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், தமிழ்நாடு முழுவதும் சிறுதானிய உணவுத் திருவிழாவை முன்னிட்டு, மகளிர் சுய உதவிக்குழுக்கள், கல்லூரி மாணவியர்ளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.  
தற்போது நாம் அனைவரும் அரிசி மற்றும் கோதுமையை உணவாக எடுத்து வருகிறோம். அரிசி மற்றும் கோதுமையைக் காட்டிலும் சிறுதானிய உணவு ஊட்டச்சத்து மிக்கது. மேலும், பண்டைய காலங்களில் உணவு பழக்க முறை சிறுதானியங்களை அடிப்படையாக கொண்டே அமைந்திருந்தது. பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதன் காரணமாக தற்போது இராகி, சாமை, சோளம், கம்பு, திணை, பனிவரகு, குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானியங்கள் அதிக அளவில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. சிறுதானிய உணவுகளை உட்கொள்வதால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
நாமக்கல் மாவட்டம் சிறுதானியங்கள் உற்பத்தியில் இந்தாண்டு தன்னிறைவு பெற்றுள்ளது. குறிப்பாக போதமலை கிராமத்தில் ஆண்டொன்றுக்கு 2,000 டன் அளவில் சிறுதானியங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. அதிலும் குறிப்பாக போதமலை பனிவரகு சிறப்பு மிக்கது. ஆனால் அப்பகுதியில் போதுமான சாலை வசதி  இல்லாததால் அப்பகுதி விவசாயிகள் சிறுதானியங்களை விற்பனை செய்ய முடியாமல் இருந்து வந்தனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விவசாயிகளின் துயரை போக்கிடும் வகையில் போதமலை பகுதிக்கு சாலை அமைத்திட ரூ.140.00 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். வேறு எந்த மாவட்டங்களிலும் இல்லாத அளவிற்கு நாமக்கல் மாவட்டத்தில் சிறுதானியங்கள் உற்பத்தி அதிகளவில் உள்ளது.  

தமிழகத்தில் சராசரியாக 8.67 இலட்சம் எக்டர் பரப்பில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்திற்கு சிறுதானிய பயிர்கள் சாகுபடி இலக்காக இவ்வாண்டு 80,100 எக்டர் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 79,327 எக்டர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக 8,000 எக்டர் சிறுதானிய பயிர்கள் சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகறது.
சிறுதானியங்களில் அதிகளவு புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் மற்றும் பல உயிர்சத்துக்களும் உள்ளன. உடல் சுறுசுறுப்பிற்க்குக் காரணமான செராட்டினின் உற்பத்திக்கு உதவுகிறது. இதயம் மற்றும் நரம்பு மண்டலத்தினை வலுப்படுத்துகிறது. உடல்பருமன் கொண்டவர்கள் சிறுதானிய உணவினை தொடர்ந்து உட்கொள்ளும்போது உடல் எடையை குறைக்க உதவுகிறது. அதிக அளவு நார்சத்து மிக்க சிறுதானியங்கள் புற்றுநோய் வருவதை தடுக்கின்றன. மேலும் சாக்கரை நோய் மற்றும் இரத்தஅழுத்தம் போன்ற நோய்களை கட்டுப்படுத்துகிறது. சிறுதானிய உணவினை கர்ப்பிணி பெண்கள் உண்ணும்போது ஊட்டச்சத்து குறைபாட்டினை கருவிலேயே களைவதற்கு உதவுகிறது. எனவே சிறுதானிய பயிர்களை சாகுபடி செய்தும், சிறுதானிய உணவு வகைகளை அன்றாட உணவில் சேர்த்தும் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்தார்.  
தொடர்ந்து, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் சிறுதானிய உணவுத் திருவிழாவை முன்னிட்டு கல்லூரி மாணவியர்களுக்கு நடத்தப்பட்ட சிறுதானிய உணவுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 4 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 
ரூ.43.00 இலட்சம் நேரடி கடனுதவிகளையும், திரு.பி.இராஜேந்திரன் அவர்களுக்கு சிறிய பால் பண்ணை அமைத்திட ரூ.72,500/- கடனுதவிகளையும் வழங்கினார். 
இந்நிகழ்ச்சியில் நாமக்கல் நகர்மன்ற தலைவர் திரு.து.கலாநிதி, துணை தலைவர் திரு.செ.பூபதி, கூட்டுறவு சங்கங்கள் இணைபதிவாளர் திரு.க.பா.அருளரசு, உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மருத்துவர் கா.ச.அருண், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் மகளிர் கலை கல்லூரி முதல்வர் திரு.மா.கோவிந்தராசு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்