******
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (28.12.2023) சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ராஜேஸ் கண்ணன் இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள்
பேசும்போது தெரிவித்ததாவது,
நாமக்கல் மாவட்டத்தில் விபத்துகளை தடுப்பதற்கும், விபத்தினால் மரணங்கள் ஏற்படுவதை தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவச் செல்வங்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் சாலை விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போக்குவரத்து அலுவலர்கள், காவல்துறையினர் ஆகியோர் பொதுமக்கள் வேகமாக மற்றும் போதையில் வாகனத்தை இயக்குவது முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும்.
சாலை விபத்துகள் ஏற்படாமல் தடுக்க இருசக்கர வாகனம் ஓட்டும்போது தலைக் கவசமும், நான்கு சக்கர வாகனம் ஓட்டும்போது சீட்பெல்ட்டும் கட்டாயம் அணியவும், வாகன ஓட்டுநர்கள் கைபேசி பயன்படுத்தாமல் இருக்கவும், சாலை விதிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்கவும், சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே துண்டுப் பிரசுரங்கள், ஒலிபெருக்கி வாயிலாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும் சரக்கு வாகனங்களில் பொதுமக்கள் பயணம் மேற்கொள்ள அனுமதிக்க கூடாது. பள்ளி மாணவர்கள் வாகனங்கள் ஓட்டக்கூடாது. நெடுஞ்சாலைத்துறையினர் விபத்து ஏற்படும் இடங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அறிவிப்பு பலகைகள், விபத்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நாமக்கல் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக உருவாக்கிட அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
நாமக்கல் மாவட்ட எல்லைக்குட்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர், போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் பள்ளி மற்றும் கல்லூரிகள் முன்பாகவும், பொது இடங்களில் இருசக்கர வாகனங்களில் வரும் மாணவர்கள் குறிப்பாக உரிய ஓட்டுநர் உரிமம் இன்றியும், தலைக்கவசம் அணியாமலும், உரிய ஆவணங்கள் இன்றியும் (பதிவுச்சான்று, காப்பீட்டு சான்று, புகைச்சான்று நடப்பில் இல்லாதது) இருவருக்கு மேல் பயணித்து வருபவர்களையும் கண்காணித்து தணிக்கை செய்து மோட்டார் வாகன சட்டவிதிகளின்படி உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தலைக்கவசம் அணியாமல் ஓட்டினால் ரூ.1,000/-, இரு சக்கர வாகனத்தில் இரண்டு நபர்களுக்கு மேல் பயணம் செய்தல் ரூ.1,000/-, உரிய காப்பீட்டு சான்று இன்றி வாகனம் ஓட்டினால் ரூ.2,000/-, செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ரூ.1,000/- அதிவேகமாக வாகனம் ஓட்டினால் ரூ.2,000/- குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000/- புகைச்சான்று இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.10,000/-, 18 வயது பூர்த்தியடையாமல் உரிய ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனத்தை ஓட்டினால் ரூ.25,000/- அபராதம் விதிக்கப்பட வேண்டும். உரிய ஓட்டுநர் உரிமம் இன்றியும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், சிறார்கள் வாகனம் ஓட்டுதல் ஆகிய குற்றங்களுக்காக வாகனம் சிறைபிடித்து நீதிமன்றம் வாயிலாக பிராது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், குடிபோதையில் வாகனம் ஒட்டுதல் மற்றும் உயிரிழப்பு விபத்து ஏற்படுத்துதல் போன்ற குற்றங்களுக்காக ஒட்டுநர் உரிமம் 6 மாதங்கள் தற்காலிக தடை மற்றும் அதிவேகமாக வாகனத்தை இயக்குதல், சிவப்பு விளக்கு சமிக்ஞை மீறுதல், சரக்கு வாகனங்களில் ஆட்களில் ஏற்றிச் செல்லுதல் போன்று குற்றங்களுக்காக ஓட்டுநர் உரிமம் 3 மாதங்கள் தற்காலிக தடை விதிக்கப்பட வேண்டும்.
எனவே மாணவர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள் மோட்டார் வாகன சட்டவிதிகளை பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கும், போக்குவரத்து துறைக்கும், காவல் துறைக்கும் விபத்துகளையும், விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளையும் பெருமளவில் குறைக்க உரிய ஒத்துழைப்பு நல்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் நடந்த 492 சாலை விபத்துகளில் 512 நபர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த மாதம் செல்போன் பேசிகொண்டு வாகனம் ஓட்டிய 125 வாகன ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதமாக ரூ.1.25 இலட்சமும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டிய 12 வாகன ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதமாக ரூ.70,000/-ம், தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 730 வாகன ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதமாக ரூ.6.02 இலட்சமும், சரக்கு ஏற்றி செல்லும் மினி/சரக்கு ஆட்டோக்களில் பொதுமக்களை ஏற்றி சென்ற 35 வாகன ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதமாக ரூ.56,300/-ம், வசூல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இன்னுயிர் காப்போம் திட்டம் – நம்மை காக்கும் 48 திட்டங்களின் கீழ் 3,798 நபர்களுக்கு ரூ.3.12 கோடி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், நெடுஞ்சாலைகள் துறை கோட்டப்பொறியாளர் திரு.திருகுணா, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் திரு.இ.எஸ்.முருகேசன் நாமக்கல் (வடக்கு), திரு.ஏ.கே.முருகேசன் நாமக்கல் (தெற்கு) உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்