நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (29.12.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச. உமா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 716.54 மி.மீ. தற்போது வரை (25.12.2023) 731.87 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் முடிய இயல்பு மழையளவை விட 15.33 மி.மீ. அதிகமாக மழை பெறப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் வரை நெல் 4164 எக்டர், சிறுதானியங்கள் 72460 எக்டர், பயறு வகைகள் 7930 எக்டர், எண்ணெய் வித்துக்கள் 29650 எக்டர், பருத்தி 2678 எக்டர் மற்றும் கரும்பு 8989 எக்டர் என மொத்தம் 123193 எக்டரில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தோட்டக்கலைப் பயிர்களில் தக்காளி 548 எக்டர், கத்திரி 401 எக்டர், வெண்டை 298 எக்டர், மிளகாய் 266 எக்டர், மரவள்ளி 3571 எக்டர், வெங்காயம் 3382 எக்டர், மஞ்சள் 1789 எக்டர் மற்றும் வாழை 2436 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விதைகள் மற்றும் உரங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் யூரியா 1798 மெ.டன், டிஏபி 613 மெ.டன், முரேட் ஆப் பொட்டாஷ் 1113 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் 431 மெ.டன், காம்ப்ளக்ஸ் 3437 மெ.டன் என்ற அளவிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பிரிமியத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு நிலக்கடலை பயிருக்கு ரூ.312.70-ஐ ரூ.31.12.2023 ஆம் தேதி வரையிலும் பருத்தி பயிருக்கு ஏக்கருக்கு தலா ரூ.584.44 –ஐ 15.03.2024ம் தேதி வரையிலும் மற்றும் கரும்பு பயிருக்கு ரூ.2,914.60–ஐ ரூ.30.03.2024 ஆம் தேதி வரையிலும் செலுத்த வேண்டும்.
மேலும், தோட்டக்கலை பயிர்களான வாழை பயிருக்கு பிரிமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.1857.44-ஐ ரூ.29.02.2024 ஆம் தேதி வரையிலும், தக்காளி பயிருக்கு பிரிமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.1017.64-ஐ 31.01.2024 வரையிலும் மற்றும் மரவள்ளி பயிருக்கு பிரிமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.1,548.70-ஐ 29.02.2024 ஆம் தேதி வரையிலும் செலுத்த வேண்டும்.
பயிர் காப்பீடு அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் மேற்கண்ட பயிர்களுக்கு உரிய பிரிமியத் தொகையை கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் சான்று, வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் (கணக்கு எண் மற்றும் IFSC Code எண்ணுடன்) ஆதார் அட்டை நகல் மற்றும் கைபேசி எண் ஆகியவற்றுடன் வணிக வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பொதுசேவை மையங்கள் மூலம் பிரிமியத் தொகை செலுத்தி பயிர் காப்பீடு பதிவு செய்து கொள்ளலாம். இதுவரை 12201.94 எக்டர் பரப்பிற்கு 29,350 விவசாயிகள் பயிர் காப்பீடு பதிவு செய்துள்ளனர்.
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் 31.12.2022 ஆம் தேதிக்குள் தவணை தவறிய அனைத்து பண்ணை சாராக் கடன்கள் மற்றும் ஆடவர் சுயஉதவிக்குழுக் கடன்கள், 9 சதவீத சாதாரண வட்டியில் கணக்கிட்டு வசூல் செய்யப்படும். கூடுதல் வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும். 25% கடன் தொகையினை 31.03.2024 ஆம் தேதிக்குள் செலுத்தி இதற்கு ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். மீதமுள்ள தொகையினை 6 சம தவணைகளாக செப்டம்பர் மாதத்திற்குள் செலுத்த வேண்டும்.
இன்றைய தினம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்களிடம் அளித்தனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் திரு.கா.இராஜாங்கம் இ.வ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் திருமதி க.ரா.மல்லிகா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.அருளரசு, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் (பொ) திரு.அ.வே.சுரேந்திரன், வேளாண்மை இணை இயக்குநர் திரு.சு.துரைசாமி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் திரு.ப.முருகேசன், தோட்டக்கலைத் துணை இயக்குநர் திரு.கி.கணேசன், வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம்) திரு.நாசர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) (பொ) திரு.கஇராமச்சந்திரன் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்