Hot Posts

6/recent/ticker-posts

நாமக்கல் மாவட்டத்தில் 60 படுக்கை வசதிகளுடன் சித்த மருத்துவமனை அமைக்க ரூ.2.00 கோடி ஒதுக்கீடு -

நாமக்கல் மாவட்டத்தில் 
60 படுக்கை வசதிகளுடன் சித்த மருத்துவமனை அமைக்க ரூ.2.00 கோடி ஒதுக்கீடு -
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள்
தகவல்.
*****
நாமக்கல் நகராட்சி, நாமக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் (தெற்கு), மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் சார்பில், 7-வது தேசிய சித்த மருத்துவ திருநாள் விழாவை முன்னிட்டு, இலவச சித்த மருத்துவ முகாமினை இன்று (30.12.2023) பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.பெ.ராமலிங்கம் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கு மகப்பேறு சஞ்சீவி மருந்து பெட்டகத்தை வழங்கினார். 

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்ததாவது,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அரசுத்துறைகளின் வாயிலாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். பொதுமக்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48 திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்கள்.

இன்றைய தினம் நாமக்கல் மாவட்டத்தில் சித்த மருத்துவத்தின் தந்தை அகத்திய முனிவரின் பிறந்த மாதத்தில் தேசிய சித்த மருத்துவ திருநாள் கொண்டாடப்பட்டு வருவது சிறப்பு மிக்க ஒன்றாகும். முனிவர் திருமூலர் அவர்களே உணவே மருந்து என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்தியவர். நம் உணவு பழக்கங்களே நமக்கு மருந்தாக அமையும் என்றும், உணவு முறையே நமக்கு நோயற்ற வாழ்வை வழங்கும் என்று எடுத்துரைத்தவர். நமக்கு தேவையான அனைத்து சத்துகளும் காய்கறிகள், பழங்கள், கீரைகள் மூலமாக கிடைக்கிறது. 

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த 2006-2011-ம்  ஆண்டுகளில் சிக்கன் குனியா நோய் பரவிய காலத்தில், சித்த மருத்துவம் முறையில் பொதுமக்களுக்கு நில வேம்பு காசயத்தை வழங்கி நோயை கட்டுப்படுத்தினார். மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சித்த மருத்துவத்திற்கென தனியாக பல்கலைக்கழகம் நிறுவ சட்டம் இயற்றி உள்ளார்கள்.  

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நாமக்கல் நகராட்சி பகுதியில் இயங்கி வந்த அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ கல்லூரி தற்போது புதிய கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, அந்த கட்டடத்தில் 60 படுக்கை வசதிகள் கொண்ட மாபெரும் சித்த மருத்துவமனையை உருவாக்கிட ரூ.2.00 கோடி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்துள்ளார்கள். சித்த மருத்துவமனை அமைக்கும் பணிகள் விரைவில் முடிக்கபட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும். இந்த சித்த மருத்துவமனை 3 ஆண்டுகளில் சித்த மருத்துவ கல்லூரியாக தரம் உயர்த்தப்படும் என்றும் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

கொரோனா கால கட்டத்தில் சித்த மருத்துவ முறையில் தான் உணவிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்திட முடியும் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எடுத்துரைத்தார்கள். அந்த வகையில் நமக்கு நோய் வருவதற்கு முன்பே, வருமுன் காத்திட சித்த மருத்துவ முறையே மிகச்சிறந்த ஒன்றாகும். 

இன்றைய தினம் சித்த மருத்துவ முகாமிற்கு வருகை தரும் பொதுமக்கள் அனைவருக்கும், மருத்துவர்கள் மூலம் உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது குறித்த பல்வேறு ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் அனைவரும் முறையாக பயன்படுத்தி கொண்டு தங்களின் உடல் ஆரோகியத்தை மேம்படுத்திட வேண்டும் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்தார்.

தொடர்ந்து, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.பெ.ராமலிங்கம் அவர்கள் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முன்னதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் சார்பில், அமைக்கப்பட்டிருந்த மூலிகைகள் மற்றும் அதன் சிறப்புகள் குறித்த சித்த மருத்துவ கண்காட்சியை பார்வையிட்டார்கள். 

இந்நிகழ்ச்சியில் நாமக்கல் நகர்மன்ற தலைவர் திரு.து.கலாநிதி, நகர்மன்ற துணைத்தலைவர் திரு.செ.பூபதி, நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மருத்துவர் கே.சாந்தா அருள்மொழி, துணை இயக்குநர் சுகாதார பணிகள் மருத்துவர் க.பூங்கொடி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர் கே.பி.இராமச்சந்திரன், உதவி சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர் து.தமிழ்செல்வன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், துறைசார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்