2023-24 ஆம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களால் நாமக்கல் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு புதிய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசாணை (நிலை) எண்.150, வேளாண்மை உழவர் நலத்(வே.வி2(1)), துறை நாள்.13.07.2023 இன் படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நாமக்கல் மாவட்டம், வசந்தபுரம் கிராமத்தில் 2.0 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது.
அதன்படி, புதிய நாமக்கல் ஒழுங்குமுறை விற்பனை கூடம், ரூ.2.00 கோடி மதிப்பில் e-NAM பரிவர்த்தனைக்கூடம், ரூ.2.00 கோடி மதிப்பில் சேமிப்பு கிடங்கு, ரூ.14.00 இலட்சம் மதிப்பில் உலர் களம், ரூ.2.46 கோடி மதிப்பில் விவசாயிகள் ஓய்வறையுடன் கூடிய பரிவர்த்தனைக்கூடம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளுடன் மொத்தம் ரூ.6.60 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ளது.
உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுவதன் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விற்பனை செய்ய முடியும். சேமிப்பு கிடங்கில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நீண்ட நாட்களுக்கு பாதுகாப்பாக சேமித்து வைக்க முடியும். மேலும், பொருளீட்டுக்கடன் பெறவும் இயலும். சேமிப்பு வசதி ஏற்படுத்தப்படுவதன் மூலம் அறுவடைக்கு பிந்தைய சேதம் தவிர்க்கப்படுவதுடன் மழை காலங்களில் தானியங்களை பாதுகாப்பாக வைத்திட முடியும்.
மேலும், விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உறுதி செய்யப்படுவதுடன், இடைத்தரகர்களது இடையூறு இல்லாமல் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை அதிக விலைக்கு விற்று பயன்பெற முடியும். ஆதார திட்டம் (Price Support Scheme)இன் கீழ் பச்சை பயிறு, உளுந்து, கொப்பரை போன்ற விளைபொருட்கள் அரசால் கொள்முதல் செய்யப்படுதன் வாயிலாக விவசாயிகளுக்கு அதிக இலாபம் கிடைக்க வழி வகுக்கும். e-NAM எனப்படும் மின்னனு தேசிய வேளாண் சந்தை இணைய முகப்பு வாயிலாக விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை உள்ளூர் மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களுக்கும் விற்பனை செய்து விளைபொருட்களுக்கான தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணை இயக்குநர் திரு.சு.துரைசாமி, நாமக்கல் விற்பனைக்குழு தனி அலுவலர் திரு.அ.நாசர், நாமக்கல் விற்பனைக்குழு செயலாளர் திரு.இரா.தர்மராஜ் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்