நாமக்கல் மாவட்டம், மோகனூர் பேரூராட்சியில் தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சி.
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் புதியதாக கட்டப்பட்ட வீட்டின் சாவியினை உரிமையாளர்களிடம் வழங்கி, வாழ்த்துக்களை தெரிவித்தார்.
******
நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம், காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் திரு.தங்கபாண்டியன் அவர்களின் மகன் மற்றும் மகள் ஆகியோர் தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். திரு.தங்கபாண்டியன் அவர்களின் மகன் மற்றும் மகள் ஆகியோர் தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, 22.08.2023 அன்று அவர்களுக்கு மோகனூர் வட்டம், பேட்டபாளையத்தில் இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையினையும், தனது சொந்த நிதியிலிருந்து பராமரிப்பு தொகையாக ரூ.10,000/-, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஷ்குமார் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வழங்கினார்கள். மேலும், மாதந்தோறும் 25 கிலோ அரிசி, உளுந்து, துவரை பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட வீட்டு மளிகை பொருட்கள் வழங்குவதாகவும் அவர்களுக்கு உறுதியளித்தார். மேலும், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.பெ.இராமலிங்கம் அவர்கள் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.78,000/- மதிப்பிலான படுக்கைகள் மற்றும் சக்கர நாற்காலிகளில் இருந்து மாற்றுவதற்கான இயந்திரத்தினை வழங்கினார்கள்.
தொடர்ந்து, பட்ட வழங்கிய 24 மணி நேரத்தில் வீடு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பட்டா வழங்கப்பட்ட இடமான பேட்டபாளையத்தில் ரூ.9.00 இலட்சம் மதிப்பீட்டில் 430 சதுர அடி பரப்பளவில் வீடு கட்டும் பணியினை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் அவர்கள் 23.08.2023 அன்று தொடங்கி வைத்தார்கள். மேலும், வீடு கட்டும் பணிக்கு பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான தனது மாத ஊதியத்திலிருந்து ரூ.2.00 இலட்சத்திற்கான காசோலையினை வழங்குவதாகவும் தெரிவித்தார். அதன்படி, 25.08.2023 அன்று ரூ.2.00 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் அவர்கள் வழங்கினார்.
மேற்படி, மோகனூர் வட்டம், பேட்டபாளையத்தில் வீடுகட்டும் பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, இன்று (29.01.2024) பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.பெ.ராமலிங்கம் அவர்கள் முன்னிலையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் மாவட்ட ஆட்சியரின் சமூக பொறுப்பு நிதிகளிலிருந்து ரூ.9.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீட்டிற்கான சாவியினை உரிமையாளர்களிடம் வழங்கி, வாழ்த்துக்களை தெரிவித்தார்.
வீட்டின் உரிமையாளர் திருமதி த.பெரியநாயகி அவர்கள் தெரிவித்ததாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எங்களை போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி, எங்களை பாதுகாத்து வருகிறார்கள். நாங்கள் தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளை மிகுந்த சிரமத்துடன் வளர்த்து வந்தோம். குழந்தைகளை கவனித்து கொண்டு சரியாக வேலைக்கு செல்ல முடியாமல் போதிய வருமானம் இன்றி வாழவே வழி இன்றி இருந்தோம். அந்த நிலையில் எம்.பி சார், காலெக்டர் மேடம், எம்.எல்.ஏ ஐயா அவர்கள் எங்களை பார்வையிட்டு, எங்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளையும், உபகரணங்களையும் வழங்கியதோடு, ஒவ்வொரு மாதத்திற்கும் தேவையான மளிகை பொருட்களை வழங்கினார்கள். மேலும், நாங்கள் வாடகை குடியிருப்பில் வசித்து வந்த நிலையில் எங்களுக்கு புதிய வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை வைத்தோம். எங்களது கோரிக்கையை உடனடியாக பரிசிலீத்த எம்.பி சார், காலெக்டர் மேடம், எம்.எல்.ஏ சார் ஆகியோர் பேட்டபாளையத்தில் ரூ.9.00 இலட்சம் மதிப்பீட்டில் வீடுகட்ட நிதி ஒதுக்கீடு செய்து வீடுகட்டி கொடுத்துள்ளார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா அவர்களுக்கு எங்களது குடும்பம் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். எம்.பி சார், காலெக்டர் மேடம், எம்.எல்.ஏ ஐயா அவர்களுக்கும், எங்களுக்கு உதவிய அனைத்து அரசுத்துறை அலுவலர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் அட்மா குழுத்தலைவர் திரு.நவலடி, மோகனூர் பேரூராட்சி தலைவர் திருமதி வனிதா மோகன், செயல் அலுவலர் திருமதி கோமதி, மோகனூர் வட்டாட்சியர் திரு.மணிகண்டன், பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் திரு.ஜவஹர் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்