நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.3.10 இலட்சம் மதிப்பிலான
நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (08.01.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 439 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்களிடம் பொதுமக்கள் வழங்கினார்கள். மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், கோவிட் – 19 தொற்றால் ஒற்றைப் பெற்றோரை இழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த கிஷோர் கண்ணா அவர்களுக்கு ரூ.30,000/- மற்றும் பிரதீஷ் கண்ணா அவர்களுக்கு ரூ.40,000/- என மொத்தம் ரூ.70,000 /-க்கான காசோலைகளை கல்லூரி கட்டணமாக மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். தொடர்ந்து, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், கொண்டிசெட்டிப்பட்டி, அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்திற்கு முன்பண நிதியாக
ரூ.2.40 இலட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை அலுவலரிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.எம்.சிவக்குமார், வருவாய் கோட்டாட்சியர்கள் திரு.மா.க.சரவணன் (நாமக்கல்), திருமதி சே.சுகந்தி (திருச்செங்கோடு), தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.ச.பிரபாகரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.சதீஷ்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்