உலகளவில் பெண்கள் விண்வெளி ஆராய்ச்சி, மருத்துவம் என அனைத்து துறையிலும் சாதனையார்களாக சிறப்பிடம் பெற்றுள்ளார்கள் என்பது பெருமைக்குரிய ஒன்றாகும்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் பெருமிதம்.
----
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், இன்று (12.01.2024) நாமக்கல் கோஸ்டல் ரெசிடென்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு மற்றும் உணர்திறன் பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்து, விழிப்புணர்வு பதாகைகளை வெளியிட்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். மேலும் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக இல்லம் தேடி கல்வி திட்டம், நான் முதல்வன், புதுமைப் பெண் திட்டம், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான காலை உணவுத்திட்டம், மகளிர் காவல் நிலையம் செயல்பாடு என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். மேலும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக
”பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" திட்டத்தை தனி கவனம் செலுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்கள்.
"பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" என்ற திட்டத்தின் முக்கிய நோக்கமானது, பெண் குழந்தைகளின் பிறப்பினை உறுதி செய்து, அவர்களின் கல்வி, திறன் மற்றும் பங்கேற்பினை மேம்படுத்துதல் ஆகும்.” இத்திட்டமானது ஆண், பெண் குழந்தை விகிதத்தை சமன்படுத்துவதற்காகவும், குறைந்து வரும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பெண் குழந்தைகளின் பாலின சமநிலையை மேம்படுத்திடவும், பெண் குழந்தைகள் கல்வி கற்பதை உறுதி செய்திடவும். பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தவும், பாலின பாகுபாட்டை நீக்கவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் பெண் குழந்தை பிறப்பினை போற்றி மரக்கன்றுகள் நடுதல், கிராமம் தோறும் ஆண்/பெண் பாலின விகிதத்தை தெரிவிக்கும் தகவல் பலகை பராமரித்தல், பள்ளிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கையை அதிகப்படுத்துதல், தக்கவைத்தல், அவர்களின் உயர் கல்விக்கு செல்வதை உறுதிபடுத்துதல், சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி உள்ளிட்டவற்றை மேம்படுத்துதல், குழந்தை திருமணம் நடைபெறாத கிராமங்களை ஊக்குவித்து பெருமைப்படுத்துதல், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களை பாராட்டி திட்டத்திற்கான விளம்பர தூதுவர்களாக நியமித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இன்றைய காலத்தில் பெண் குழந்தையையும், ஆண் குழந்தையையும் சமுதாயத்தில் சமமாக சிறந்த முறையில் வளர்ப்பதும், சிறந்த கல்வி அளிப்பதும் பெற்றோர்களின் கடமையாகும். ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தைகளை பாகுபாடின்றி உணவு, கல்வி, விளையாட்டு, ஊட்டச்சத்து என அனைத்தையும் சமமாக வழங்கிட வேண்டும். கருவிலேயே ஆணா, பெண்ணா என்பதை அறிவதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும். இன்றைய காலத்தில் வேறுபாடுகளை தவிர்த்து குழந்தைகள் சமமாக வளர்க்கப்பட்டு வருவது சிறப்பான ஒன்றாகும். அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் தான் தாய்சேய் நலப்பணியில் முதல் கட்டத்தில் உள்ளார்கள். இவர்கள் தான் இரு கண்கள் போன்றவர்கள். கர்ப்பிணி பெண்களின் விவரம் கணக்கெடுத்தல், கர்ப்பிணி பெண்களின் உடல் ஆரோகியத்தை கண்காணித்தல், குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து வழங்குதல், கர்ப்ப கால பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்றைய காலத்தில் இந்திரா காந்தி அம்மையார், கல்பனா சாவ்லா போன்றவர்கள் விண்வெளி ஆராய்ச்சி, மருத்துவம் என அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதித்து வருகின்றார்கள். எனவே, அனைத்து பெண் குழந்தைகளுக்கும் கல்வி மிக முக்கிய ஒன்றாகும். பெண் குழந்தைக்கு கல்வி வழங்குவதால் அவர்கள் சமுதாயத்தில் முன்னேறி நாட்டிற்கு பெருமை சேர்க்க முடியும். எனவே, நாம் அனைவரும் பெண் குழந்தைகளின் கல்விக்கும், பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளித்திட வேண்டும்.
பெண் குழந்தை பாதுகாப்பை உறுதி செய்யவும், பெண் குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்காகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், இன்றைய தினம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ”பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டம் குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு மற்றும் உணர்திறன் பயிற்சி பட்டறை நடத்தப்பட்டு வருகிறது. கல்வியால் நமக்கு சமுதாயத்தில் கிடைத்த சிறப்பும், பெருமையும் அனைத்து பெண்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற வகையில் இப்பயிற்சியை அனைத்து அலுவலர்களும் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.த.மாதவன், தனித்துறை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.ச.பிரபாகரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் (பொ) திருமதி எஸ்.சசிகலா, துறைசார்ந்த அலுவலர்கள் உட்பட தொலைக்காட்சி, நாளிதழ்களை சேர்ந்த பத்திரிக்கையாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் கலந்து கொண்டார்கள்.
0 கருத்துகள்