பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், தேங்கல்பாளையம் ஊராட்சியில்
குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில்
பங்கேற்றார்.
******
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், தேங்கல்பாளையம் ஊராட்சியில் இன்று (26.01.2024) குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபைக்கூட்டத்தில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆப., அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கிராம ஊராட்சி நிருவாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், மூவாலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம், தேசிய வாக்காளர் தினம் குறித்த உறுதி மொழி வாசித்தல், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மக்கள் நிலை ஆய்வு, வறுமை குறைப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாட்டு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் பேசியதாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கிராமப்புற மக்களிடையே அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அரசின் அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும், மக்கள் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையிலும் குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், மகாத்மா காந்தியடிகள் அவர்களின் பிறந்த தினம், உலக தண்ணீர் தினம், உள்ளாட்சிகள் தினம் ஆகிய தினங்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்த உத்தரவிட்டுள்ளார்கள். மகாத்மா காந்தியடிகள் அவர்கள் கிராமம் தான் இந்திய நாட்டின் முதுகெழும்பு என கூறியுள்ளார்கள். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கிராம பொருளாதார வளர்ச்சி தான் முக்கிய அடிப்படை காரணம் என்பதை உணர்த்தி உள்ளார்கள். இன்றைய தினம் தேங்கல்பாளையம் கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுவது சிறப்பு மிக்க ஒன்றாகும். தொடர்ந்து சமத்துவ விருந்து நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
தேங்கல் ஊராட்சிக்கு மட்டும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டம், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம், 15-வது நிதிக்குழு மான்யம் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் 40 வளர்ச்சித்திட்ட பணிகள் ரூ.1.45 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திய மாநிலம் நம் தமிழ்நாடு ஆகும். கொரோனா காலகட்டத்தில் அனைவருக்கும் ரூ.4,000/-உதவித்தொகை, நகை கடன் தள்ளுபடி, விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்கள். அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்களின் பசியை போக்கும் வகையில் காலை உணவு திட்டம், உயர்கல்வியில் 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு, மகளிருக்கு மாதம் ரூ.1,000/- வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டம், மகளிருக்கு இலவச பேருந்து பயணம் என நம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக கொண்டு வரப்படாத திட்டங்கள் அனைத்தையும் இந்த இரண்டரை ஆண்டுகளில் செயல்படுத்தி உள்ளார்கள் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்தார்.
முன்னதாக தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழியினை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் ஏற்று கொண்டனர்.
தொடர்ந்து, தேங்கல்பாளையம் ஊராட்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நடைபெற்ற சமத்துவ விருந்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.
இக்கூட்டத்தில் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் திருமதி.பி.தங்கம்மாள், ஒன்றியக்குழு உறுப்பினர் திரு.ஆர்.எம்.துரைசாமி, ஊராட்சி மன்ற தலைவர் திரு.சத்யராஜூ, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.எம்.சிவக்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.க.அசோக்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திரு.வெ.முருகன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.சதீஷ்குமார், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனார்.
0 கருத்துகள்