மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்களின் மார்பளவு வெண்கல சிலையை திறந்து வைத்தார்.
****
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 22.1.2024 அன்று தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்களின் நினைவு இல்லத்தில் மார்பளவு வெண்கல சிலையை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டின் புகழ்சால் பெருந்தகையாளர்கள், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு தமிழ்நாட்டிற்குப் பெருமைத் தேடித்தந்த அறிஞர் பெருமக்கள், சமூகநீதி, விடுதலை உணர்வுகளை ஊட்டிவளர்த்த கவிஞர்கள், இசை மேதைகள், தமிழ்நாட்டின் தியாக வரலாற்றுக்கு உன்னத சாட்சியங்களாக விளங்கும் தியாகிகள், மேதைகள் மற்றும் அறிஞர்களின் நினைவுகளைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையிலும், தமிழ் சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையிலும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நினைவகங்கள், திருவுருவச் சிலைகள், அரங்கங்கள், நினைவுத் தூண்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு, சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்களுக்கு திருவுருவச்சிலை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு திருவுருவச் சிலை, அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அம்பேத்கர் முழு உருவ வெண்கலச்சிலை, பிதாமகர் கி.ரா. அவர்களுக்கு சிலையுடன் கூடிய அரங்கம், காந்தி மண்டபத்தில் வ.உ.சி. அவர்கள் சிறையில் இழுத்த செக்கு வைக்கப்பட்டிருக்கக்கூடிய மண்டபம் பொலிவூட்டப்பட்டு அங்கு அவரது மார்பளவு சிலை, வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களுக்கு திருவுருவச் சிலை, மருது சகோதரர்களுக்கு திருவுருவச் சிலை, கோயம்புத்தூர் வ.உ.சி. பூங்காவில் வ.உ. சிதம்பரனார் முழு உருவச் சிலை, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்களுக்கு திருவுருவச் சிலை, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அவர்களுக்கு திருவுருவச் சிலை, பேராசிரியர் அன்பழகன் அவர்களுக்கு திருவுருவச் சிலை, டாக்டர் ப. சுப்பராயன் அவர்களுக்கு திருவுருவச் சிலை, வங்கக்கவி ரவீந்திரநாத் தாகூர் அவர்களுக்கு திருவுருவச் சிலை, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் திருவுருவச் சிலை, பிரபல பின்னணிப் பாடகர் டி.எம். சௌந்தரராஜன் அவர்களுக்கு திருவுருவச் சிலை, அஞ்சலை அம்மாள் அவர்களுக்கு திருவுருவச் சிலை, ராவ்பகதூர் குரூஸ்பர்னாந்தீஸ் அவர்களுக்கு மணிடபம், முன்னாள் இந்தியப் பிரதமர் வி.பி. சிங் அவர்களுக்கு முழு உருவச் சிலை, அயோத்திதாசர் அவர்களுக்கு மண்டபம், என்று நாட்டிற்கு பெருமை தேடித் தந்த சுதந்திரப் போராட்ட தலைவர்கள், கவிஞர்கள், அறிஞர் பெருமக்களின் நினைவைப் போற்றி சிறப்பிக்கும் வகையில் திருவுருவச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லத்தில் மார்பளவுச் சிலை திறந்து வைத்தல்
“கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்திப் பாடலையும், “தமிழனென்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா” “தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு” போன்ற வீர வரிகளுக்கு வித்திட்டவர் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்கள். இவர் 1932ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றார். தமது தேச பக்திமிக்க பேச்சினால் பல இளைஞர்களை தேசத்தொண்டர்களாக மாற்றினார். மலைக்கள்ளன், காணாமல் போன கல்யாணப் பெண் ஆகிய நாவல்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், பிரார்த்தனை கவிதைகள், திருக்குறள் புதிய உரை போன்ற நூல்களையும் எழுதியுள்ளார்.
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்களின் நினைவை போற்றிடும் வகையில், 2023-24ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மானியக் கோரிக்கையில், தமிழ்நாடு அரசின் முதல் அரசவைக் கவிஞர், தேசியப் போராட்டத் தியாகி, உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின் வழிநடைப் பாடல் ஆசிரியர் மற்றும் பத்ம பூஷன் பட்டம் பெற்றவருமான நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்களுக்கு நாமக்கல் நகரில் அன்னாரின் நினைவு இல்லத்தில் மார்பளவுச் சிலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, நாமக்கல் நகரில் உள்ள நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லத்தில் 20 இலட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள அவரது மார்பளவுச் சிலையினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து, நாமக்கல் நகராட்சி, நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்களின் நினைவு இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.பெ.ராமலிங்கம் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்களின் திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
மேலும், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்களின் வாரிசுதாரர்களுக்கு புத்தகங்கள் வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார். தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட புத்தகங்களை நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்களின் நினைவு இல்லத்தில் செயல்படும் நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நாமக்கல் நகர்மன்ற தலைவர் திரு.து.கலாநிதி, துணைத்தலைவர் திரு.செ.பூபதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.தே.ராம்குமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) திரு.த.வடிவேல், மாவட்ட நூலக அலுவலர் (பொ) திருமதி ச.தேன்மொழி நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்களின் வாரிசுதாரர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்