வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை மேற்கொள்ள வேண்டும்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்.
*****
நாமக்கல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் (தெற்கு) இன்று (25.01.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியை கொடிசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த விழிப்புணர்வு பேரணியானது, நாமக்கல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் (தெற்கு) தொடங்கி, பேருந்து நிலையம் வழியாக நாமக்கல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் (தெற்கு) நிறைவடைந்தது. இந்த விழிப்புணர்வு பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு, தேசிய வாக்காளர் தினம் விழிப்புணர்வு குறித்த பாதைகளை ஏந்தி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது,
ஒவ்வொரு குடிமகனின் வாக்கும் இந்தியாவின் தலையெழுத்தை மாற்றும் உரிமையும், வலிமையும் உண்டு என்கிறது தேர்தல் ஆணையம். ஜனவரி 25 ஆம் தேதி அன்று இளைஞர்களுக்கு வாக்களிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேசிய வாக்காளர் தினம் அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் தேர்தல் ஆணையம் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி அமைக்கப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு வருடமும் அதன் தொடக்க தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வாக்குரிமையை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி, அனைவரையும் வாக்களிக்க வைக்கும் நோக்கத்தில், தேசிய அளவில் வாக்காளர் தினம் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் இந்நாளில் தொடர்ந்து பிரச்சாரம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
18-வயது பூர்த்தியடைந்த அனைவரும் கட்டாயம் வாக்காளர் அட்டை பெற்று, தேர்தல் அன்று தங்களது ஜனநாயக கடமையை மேற்கொள்ள வேண்டும். வாக்காளர் அட்டை பெற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு தேர்தலிலும் எவ்வித அச்சமின்றியும், நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் கண்ணியத்தையும் நிலைநிறுத்துவோம் தாக்கமின்றியும் அல்லது வேறு ஏதேனும் தூண்டுதல்களின்றியும் வாக்களிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
முன்னதாக, நாமக்கல் பேருந்து நிலையத்தில், ”தேசிய வாக்காளர் தின உறுதிமொழியான “மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதி மொழிகிறோம்”. என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பொதுமக்கள், பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள், அரசு அலுவலர்கள் உறுதிமொழியினை ஏற்று, தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்து, அமைக்கப்பட்டிருந்த செல்ஃபி பூத்தில் பொதுமக்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.
மேலும், நாமக்கல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் (தெற்கு), மாணவ, மாணவியர்களுக்கு தேர்தல் தொடர்பான அஞ்சல் வாக்கு அளிப்பது, மின்னணு வாக்குப்பதிவு செய்தல், Voters Help Line செயலியை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு குறும்படம் காட்சிபடுத்தப்பட்டு, கவிஞர் இராமலிங்கம் அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் சி.எம்.எஸ் கல்லூரி மாணவ, மாணவியர்களின் தேர்தல் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்.
தொடர்ந்து, பொதுமக்களுக்கு தேர்தலில் EVM / VVPAT இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நடமாடு 3 வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முன்னதாக, தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு நடத்தப்பட்ட கட்டுரை போட்டி, வினாடி – வினா, சுவரொட்டி வரைதல், பாட்டுப்போட்டி, கோலப்போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.மா.க.சரவணன், முதன்மை கல்வி அலுவலர் திருமதி ப.மகேஸ்வரி, வட்டாட்சியர் (தேர்தல்கள்) திரு.திருமுருகன், செஞ்சிலுவை சங்கம் ஒருங்கிணைப்பாளர் திரு.ராஜேஸ்கண்ணன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்
0 கருத்துகள்