நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், பள்ளி மாணவ-மாணவிகளின் கல்லூரி களப்பயணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், லத்துவாடி கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில், இன்று (03.01.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், பள்ளி மாணவ-மாணவிகளின் கல்லூரி களப்பயணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில், ‘நான் முதல்வன்’ திட்டத்தை செயல்படுத்தி உள்ளார்கள். இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பது ஆகும். அடுத்தடுத்து அவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படிப் படிக்கலாம் என்றும் வழிகாட்டும் திட்டமாகும்.
ஒவ்வொரு குழந்தைகளும் நல்ல குழந்தைகள் தான். ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒரு தனித்திறமை உள்ளது. அவர்களின் தனித்திறமையை கண்டறிந்து அவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டியாக நான் முதல்வன் திட்டத்தின் ஒரு அங்கம் தான் கல்லூரி களப்பயணம் திட்டம் ஆகும். வருகின்ற மார்ச் மாதம் மேல்நிலை இரண்டாமாண்டு பொது தேர்வு நடைபெறுவதையொட்டி, மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயில எந்த துறையை தேர்வு செய்யலாம் என்ற சந்தேகத்தை போக்கிடும் வகையில் இந்த கல்லூரி களப்பயணம் நிகழ்ச்சி ஜனவரி மாதம் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அரசு பள்ளி மாணவ, மாணவியர்களின் உயர்கல்வி கனவை நினைவாக்கிடும் வகையில் இத்தகைய திட்டத்தை வடிவமைத்து செயல்டுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மாணவ, மாணவியர்கள் சார்பாக எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
அனைத்து மாணவர்களுக்கும் அரசு வேலை என்பது சாத்தியம் இல்லாத பட்சத்தில், உங்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கிட அரசின் மூலம் வங்கி கடனுதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாணவர்கள் உயர்கல்வியில் எந்த துறையை தேர்வு செய்தாலும், அந்த துறையில் தங்களது கருத்தையும், கவனத்தையும் செலுத்தி நீங்கள் முழு ஈடுபாட்டுடன் முயற்சி செய்தால் கட்டாயம் உயர்நிலையை அடைய முடியும். அரசுப்பள்ளியில் பயில்வது பெருமையான ஒன்றாக கருதும் வகையில் அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்களின் உயர்கல்வியை கருத்தில் கொண்டு மருத்துவம், பொறியியல், வேளாண்மை, சட்டம் உள்ளிட்ட உயர்கல்வி பயில 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கி உள்ளது. மேலும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை உள்ளிட்ட அரசு துறைகளின் சார்பில், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி அவர்களை கல்வி பயில அரசு ஊக்குவித்து வருகிறது. பெண் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக புதுமை பெண் திட்டத்தை செயல்படுத்தி, உயர்கல்வி பயிலும் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கி வருகிறது. பெண்கள் சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைந்திட பெண்களை கருத்தில் கொண்டு இலவச பேருந்து பயணத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
நாமக்கல் மாவட்டம் கால்நடை தொழிலை மையமாக கொண்ட ஒரு மாவட்டம் ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் ஒரு நாளைக்கு 1.30 இலட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. நாமக்கல் கால்நடை மருத்துவமனையில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவ வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது. நம் மாவட்டத்தில் கால்நடை மருத்துவர்களுக்கு அதிக தேவை உள்ளது. நம் மாவட்டம் முட்டை உற்பத்தியில் முதன்மை மாவட்டமாக உள்ளது. எனவே, கால்நடை சார்ந்த படிப்புகளை நாம் தேர்வு செய்து படித்தால் நல்ல வேலைவாய்ப்பு உள்ளது.
எனவே, மாணவ, மாணவியர்கள் அரசின் திட்டங்களை சரியாக பயன்படுத்தி கொண்டு நம் மாவட்டத்திற்கும், தங்கள் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்திட வேண்டுமென்று மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர்.ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
மேலும், 03.01.2024 முதல் 05.01.2024 வரை அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், குமாரபாளையம் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சேந்தமங்கலம் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி, சட்ட கல்லூரி, நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் மகளிர் கலை கல்லூரி, திருவள்ளுவர் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குமாரபாளையம் ஜே.கே.கே கல்லூரி, பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய 10 கல்லூரிகளுக்கு 3,290 அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்கள் கல்லூரி கள பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
தொடர்ந்து, நாமக்கல் வட்டம், மாரப்பநாயக்கன்பட்டியில், கூட்டுறவு துறைக்கு, கூட்டுறவு மேலாண்மை நிலைய பயிற்சி கட்டிடம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தையும், இராசாம்பாளையத்தில் அறிஞர் அண்ணா கலை கல்லூரி ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதிக்கு மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர்.ச.உமா., இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மருத்துவர்.மு.நடராஜன், முதன்மை கல்வி அலுவலர் திருமதி ப.மகேஸ்வரி, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் முனைவர்.ம.செல்வராஜூ, கால்நடை சிகிச்சைத்துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர்.ச.தர்மசீலன், கல்வி சிறப்புப்பிரிவு பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர்.வீ.ரமேஷ், நாமக்கல் வட்டாட்சியர் திரு.சக்திவேல் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்