ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் நாட்டின மீன்குஞ்சுகளை
இருப்பு செய்தார்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் இன்று (30.01.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் திரு.எஸ்.எம்.மதுரா செந்தில் அவர்கள் முன்னிலையில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், நாட்டின மீன்குஞ்சுகளை இருப்பு செய்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள்
தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைகிணங்க, நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் நாட்டின மீன்வளங்களை பாதுகாத்து பெருக்கிடும் வகையில் மீன் குஞ்சுகளை இருப்பு செய்யும் பணி இன்றைய தினம் நடைபெற்று வருகிறது.
மீன் ஏழைகளின் உணவு. குறைந்த விலையில் அதிக புரதச்சத்து கிடைக்கக்கூடிய மாமிச உணவு. குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், நோயாளிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் புரதச்சத்து உணவு என்பது மிகவும் அவசியமானதாகும். அந்த வகையில் நாட்டின மீன் வளங்களை பாதுகாத்திடும் வகையில் மேட்டூர் அணையில் அதிக அளவில் இனப்பெருக்கம் செய்து பெறப்பட்ட மீன் குஞ்சுகளை தற்போது காவிரி ஆற்றில் இருப்பு செய்யப்படுகிறது. இங்கே இருப்பு செய்வதன் மூலம் இப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரமும் பொருளாதாரமும் மேம்பாடு அடையும்.
அதன் அடிப்படையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆறுகளில் வளரக்கூடிய நன்னீர் மீன்களை பாதுகாத்திடும் வகையில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் இத்திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார்கள். இத்திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் இரண்டாம் ஆண்டாக ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் ரூ.9.45 இலட்சம் மதிப்பீட்டில் சுமார் 3.50 லட்சம் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்படுகிறது. இதன் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும். இதற்காக மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.எஸ்.மூர்த்தி, ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் திரு.ஜெ.பி.ரவி, ஒன்றியக்குழு உறுப்பினர் திரு.சண்முகம், மீன்வளத்துறை உதவி இயக்குநர் திருமதி உமா கலைச்செல்வி, உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள், மீனவர் சங்க பிரதிநிதிகள், மீனவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்