பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் குடியரசு தின விழாவை முன்னிட்டு வெளிமாநில மாணவ, மாணவியர்களுக்கு இனிப்புகள் வழங்கி கலந்துரையாடினார்.
******
நாமக்கல் மாவட்டம், மோகனூர் சாலை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இன்று (26.01.2024) குடியரசு தின விழாவை முன்னிட்டு பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் வெளிமாநில மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார். மேலும், கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பொன்னாடை அணிவித்து, இனிப்புகள் வழங்கி குடியரசு தின விழா வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள்
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயின்று வரும் வெளி மாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாம் பல்வேறு வகையான காலச்சாரம், மொழி, உடை ஆகியவற்றை பின்பற்றினாலும் நாம் அனைவரும் இந்தியர்களாக ஒற்றுமையாக உள்ளோம். அரசியலமைப்பு நமது ஜனநாயகத்தின் முதுகெலும்பு எனவே அரசியலமைப்பு கொள்கைகளை நிலை நிறுத்துவது என்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். இந்தியா முழுவதும் உள்ள மாணவர்கள் நமது கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு வருகை புரிந்து பயில்வது மிகவும் பெருமையாகும். கனியன், பூங்குன்றன் கூற்றுப்படி ”யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்பது போல உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் இனம், மதம், மொழி பாகுபாடின்றி அனைவரும் நமது உறவினர்கள் ஆவார்கள்.
வெளிமாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் தங்களது அவசர காலங்களில் சொந்த ஊருக்கு செல்வதற்கு உறுதிபடுத்தப்பட்ட இரயில் பயணச் சீட்டு பெறுவதற்கான சிரமங்களை போக்கி பயணச் சீட்டை உறுதி செய்திட எனது அலுவலகத்தின் மூலம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆவனம் செய்கிறேன். எந்த நேரத்திலும், எந்த நாளிலும், எந்த உதவிக்கும் நீங்கள் என்னை தொடர்பு கொள்ளலாம். இதற்காக மாணவர்கள் அடங்கிய வாட்ஸ் ஆப் குழுவை உருவாக்கி அக்குழுவின் மூலம் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.
கல்லூரி மாணவர்களாகிய நீங்கள்தான் நம் நாட்டின் எதிர்காலம். சமுதாயத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த உங்கள் அறிவையும், திறமையையும் பயன்படுத்த வேண்டும். அரசியலமைப்பை கற்றுக்கொள்ளுங்கள், அரசியலை கற்றுக்கொள்ளுங்கள். இது உங்களுக்கு கலாச்சாரம் மற்றும் ஜனநாயக கட்டமைப்பின் தெளிவை தரும். கால்நடை மருத்துவக் கல்லூரியில் மகளிர் விடுதி அமைப்பதற்கு எனது பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50.00 இலட்சம் நிதி அளிக்கிறேன். இந்த விடுதியில் மாணவியர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பாக அமைக்கப்பட வேண்டும். மேலும், அனைத்து மொழி பேசும் மாணவர்களும் பயன்படுத்தும் வகையில் தேவையான கட்டமைப்புகளை இந்த நிதியின் மூலம் ஏற்படுத்தப்படும்.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி மாணவர்களின் கலாச்சார நிகழ்ச்சி நடத்த தேவையான நிதியும் எனது பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்கப்படும் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்தார்
முன்னதாக பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் அவர்களின் தனி செயலர் திரு.சரவணன் அவர்கள் பாராளுமன்ற மாநிலங்களை உறுப்பினர் அலுவலகம் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், மாணவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படுவது குறித்தும் காணொலிக்காட்சி வாயிலாக உரையாற்றினார்.
0 கருத்துகள்