மாற்றுத்தினாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், அமானி கிராமத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் இன்று (27.01.2024) மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில், பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் உடனடியாக மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்க மாற்றுத்தினாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை நடத்திட உத்திரவிட்டுள்ளார்கள். மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்களுக்கு இலவச பேருந்து பயண சலுகை, திருக்கோயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக திருமணம், கடைக்கோடியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் தேவையான நலத்திட்ட உதவிகளை பெறுவதை உறுதி செய்திடும் நோக்கில் உரிமைகள் திட்டம், மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் தாழ்வுதளம் அமைத்தல், இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்கள். அதனடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளின் போக்குவரத்து சிரமத்தை போக்கிடும் வகையில் வெண்ணந்தூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இன்றைய தினம் குமாரபாளையம் பகுதியில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாமில் எலும்பு முறிவு சிகிச்சை, மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை, கண் உள்ளிட்ட பரிசோதனைகள் சம்மந்தப்பட்ட மருத்துவர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உயர்சிகிச்சை தேவைப்படுவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உயர் சிகிச்சைகள், பிசியோதெரபி சிகிச்சைகள் உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்படும்.
இன்றைய தினம் 59 மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டை,
54 மாற்றுத்திறனாளிகளுக்கு புதுப்பிக்கப்பட்ட அடையாள அட்டை,
42 மாற்றுத்திறனாளிகளுக்கு UDID அடையாள அட்டை, 40 மாற்றுத்திறனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை, 16 மாற்றுத்திறனாளிகளுக்கு உயர் பாதுகாப்பு பராமரிப்பு உதவித்தொகை, 16 மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய்த்துறை சார்பில் 18-வயதிற்குட்பட்டவர்களுக்கான உதவித்தொகை, 16 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் அடையாள அட்டை, 5 மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி, 7 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவிகள், 1 மாற்றுத்திறனாளிக்கு தையல் இயந்திரம், 1 மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள் என மொத்தம் ரூ.65,350/- மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. 7 மாற்றுத்திறனாளிகளுக்கு புதியதாக வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் மகளிர் திட்டம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு கடனுதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கெள்ளப்பட்டுள்ளது. மேலும், இன்றைய தினம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு வழங்கப்படும். 29.01.2024 திங்கட்கிழமை அன்று மோகனூர் பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. எனவே, அனைவரும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை பயன்படுத்தி, தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொண்டு உயர்நிலையை அடைய வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
மேலும் இச்சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதி செய்திடும் வகையில் புதிய மாற்றுதிறனாளிகளை கண்டறிந்து புதிதாக அடையாள அட்டை வழங்குதல், UDID பதிவு மேற்கொள்ளுதல், ஆதார் அட்டை பதிவு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யப்பட்டது. பின்னர். மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற்றவர்களுக்கு உதவி உபகரணங்கள் மற்றும் மாத உதவித்தொகை, கல்வி உதவித்தொகை மற்றும் பிற அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பங்களும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
இம்முகாமில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.ச.பிரபாகரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொறுப்பு) திரு.மகிழ்நன், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட மருத்துவர்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்