பொதுமக்களின் சுகாதாரத்தை உறுதி செய்திட நாம் அனைவரும்
ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
மாவட்ட சுகாதாரப் பேரவை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்
மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்.
*****
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று (23.01.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.பெ.ராமலிங்கம் அவர்கள் முன்னிலையில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில், மாவட்ட சுகாதாரப் பேரவை கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொது மக்களின் நலன் காக்கும் வகையில் சுகாதாரத்துறையில் மக்களைத்தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் – 48 என பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் தீவிர நடவடிக்கையினால் தற்போது போலியோ நோய்த்தொற்று முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் சுற்றுச்சூழல் சுகாதாரம் என்பது சுகாதார மேம்பாட்டிற்கு மிக முக்கியமான ஒன்றாகும். அனைத்து பகுதிகளிலும் திறந்த வெளி கழிப்பிடம் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்திடும் வகையில், அனைவரது வீடுகளிலும் தனிநபர் கழிப்பிடம் பயன்படுத்திட வேண்டும். இதனால் பல்வேறு நோய்த்தொற்றுகளை நாம் தவிர்த்திட முடியும். எனவே, பொதுமக்களுக்கு சுகாதாரம் குறித்து போதுமான அளவு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.
சுகாதாரத்துறையின் மூலம் ஒரு பெண் கருவுற்றது முதல் கருவில் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சி, குழந்தை பிறப்பு, குழந்தையின் எடை, குழந்தையின் சரியான விகிதசார மாதந்திர வளர்ச்சி கணக்கீடு என தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது. பள்ளியில் குழந்தைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஆசிரியர்கள் கண்காணித்தால், ஆரம்ப நிலையிலேயே அவர்களுக்கு ஏதேனும் உடல் மற்றும் மனதளவில் குறைபாடுகள் காணப்பட்டால் ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தி, ஆரோக்கியமான குழந்தையின் வளர்ச்சியை நாம் உருவாக்கிட முடியும். பெற்றோர்களும் தங்கள் குழந்தையுடன் அதிக நேரம் செலவழித்து குழந்தைகளுக்கு நல்ல கருத்துகளை கற்றுக்கொடுத்து, சமுதாயத்தில் அவர்களை சிறப்பாக செயல்பட ஊக்குவிக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகள், சிறுதானிய உணவுகளை வழங்கி அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்திட வேண்டும். மேலும், குழந்தை திருமணத்தை முற்றிலும் தவிர்த்திடும் வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.
மேலும், சுகாதாரத்துறையை மேம்படுத்திட பல்வேறு வகையான கருத்துக்களை சுகாதார பேரவைக்கூட்டத்தின் வாயிலாக அறிந்து, அவைகளை பதிவு செய்து, மக்களுக்கு சுகாதாரத்துறையின் மூலம் என்னென்ன திட்டங்கள் தேவை என்பதை அறிந்து, அவைகளை பரிந்துரைக்க சுகாதாரப் பேரவைக் கூட்டம் நடத்தப்படுகிறது. இக்கூட்டத்தில் தாங்கள் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு, அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.
நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரை பொது சுகாதாரத்துறை, மருத்துவ பணிகள் துறை, அரசு மருத்துவக் கல்லூரி என அனைத்து மருத்துவத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர். மருத்துவத்துறை தொடர்ந்து சிறப்பாக செயல்பட தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வது அவசியம் ஆகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஊராட்சி தலைவர் திருமதி ஆர்.சாரதா, நகர்மன்ற தலைவர்கள் திரு.து.கலாநிதி (நாமக்கல்), திருமதி.நளினி சுரேஷ்பாபு (திருச்செங்கோடு), இணை இயக்குநர் குடும்பநலத்துறை (சேலம்) மரு.வளர்மதி, துணை இயக்குநர் மருத்துவ பணிகள் (காசநோய்) மரு.ஆர்.வாசுதேவன், துணை இயக்குநர் மருத்துவ பணிகள் (தொழுநோய்) மரு.ஜெயந்தினி, மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்க திட்ட மேலாளர் மரு.எம்.மகேஸ்வரன், உதவி திட்ட மேலாளர் மரு.ரா.மணிவேல், அனைத்து ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேரூராட்சி தலைவர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், முதன்மை மருத்துவ அலுவலர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்