ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் 601 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கி
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் பேச்சு.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், அத்தனூர் ஸ்ரீ பாலாஜி மஹாலில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நடைபெற்ற சிறப்பு பட்டா வழங்கும் முகாமில், ரூ.5.00 கோடி மதிப்பில் 601 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வழங்கினார்.
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் பேசியதாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் மகளிருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் உரிமை தொகை திட்டம், பெண்கள் தொழிற்கல்வி படிக்க புதுமை பெண் திட்டம், மகளிருக்கு பேருந்துகளில் இலவசப்பயணத்திட்டம், அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், இல்லம் தேடிக்கல்வி திட்டம், நான் முதல்வன் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள்.
மேலும், கொரோனா காலத்தில் நிவாரண நிதியாக ரூ.4,000/-, விவசாய பயிர் கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி செய்துள்ளார்கள். மேலும், ஏழை எளிய மக்களின் நலன்கருதி பொதுவிநியோக கடைகளில் தரமான அரிசி மற்றும் பொருட்கள் வழங்கி வருகின்றார்கள். பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் அடிப்படை வசதிகள், சுகாதாரம், தொழில் சார்ந்த திட்டங்கள், கல்வி, மருத்துவம், பேருந்துவசதி, சாலை, உணவு, வீடு என அனைத்தையும் சிந்தித்து செயல்படுத்தி மக்கள் நல பணியாற்றி வருகின்றார்கள். அந்தவகையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக கொண்டு வரப்படாத திட்டங்கள் அனைத்தும் இந்த இரண்டரை ஆண்டுகளில் செயல்படுத்தி உள்ளார்கள்.
அரசைத்தேடி பொதுமக்கள் வருவதை தவிர்த்திடும் வகையில், மக்களைத்தேடி அரசு செல்ல வேண்டுமென்ற உயரிய நோக்கத்தோடு ”மக்களுடன் முதல்வர்” என்ற திட்டத்தை செயல்படுத்தினார்கள். அத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது ஒரு மாத காலத்திற்குள் தீர்வு வழங்கிடும் வகையில் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களின் அடிப்படையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் சீரிய முயற்சியினால் நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் அவர்களட ஆகியோரின் உத்தரவின்படி, மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்களின் தொடர் முயற்சியினால், இராசிபுரம் பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திடும் வகையில் ரூ.854 கோடி மதிப்பீட்டில் இராசிபுரம் நகராட்சி, 8 பேரூராட்சிகள், 4 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 523 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்தி உள்ளார்கள். இதன் மூலம் இப்பகுதி மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும். இதுபோல மக்கள் நலனுக்காக ஒவ்வொரு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்கள்.
வீடற்ற ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் சொந்தமாக குடியிருப்பு வசதியினை உறுதி செய்யும் வகையில் வருவாய்த்துறையின் மூலம் தகுதியான பயனாளிகளுக்கு அரசு வழிமுறைகளை பின்பற்றி இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த மே 2021 முதல் நாளதுவரை 13,570 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இன்றைய தினம் ரூ.5.00 கோடி மதிப்பில் 601 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படுகிறது என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் இராசிபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் திரு.கே.பி.ஜெகநாதன், இராசிபுரம் நகர்மன்ற தலைவர் முனைவர் கவிதா சங்கர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் (வெண்ணந்தூர்) திரு.எ.ஆர்.துரைசாமி, வெண்ணந்தூர் பேரூராட்சி தலைவர் திரு.எஸ்.ராஜேஸ், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ஆர்.எம்.துரைசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் (பொ) திரு.த.முத்துராமலிங்கம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திரு.வெ.முருகன், இராசிபுரம் வட்டாட்சியர் திரு.சரவணன், உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்