தேசிய சாலை பாதுகாப்பு மாதம் – 2024 தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் பொருட்டு, இந்த ஆண்டு ஜனவரி 15 முதல் பிப்ரவரி 14 வரை தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் அனுசரிக்கப்படுகிறது. சாலையைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் விபத்தில்லாப் பயணத்தை உறுதி செய்வது தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழாவின் முக்கிய நோக்கமாகும்.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு மாதம் குறித்த பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போக்குவரத்து துறை, காவல்துறை, நெடுஞ்சாலைகள் துறை மற்றும் தன்னார்வலர்கள் மூலம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (01.02.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ராஜேஸ் கண்ணன் இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த விழிப்புணர்வு பேரணியானது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி நல்லிபாளையம், நாமக்கல் பேருந்து நிலையம், மோகனூர் சாலை, திருச்சி சாலை வழியாக பூங்கா சாலையில் நிறைவடைந்தது. இந்த விழிப்புணர்வு பேரணியில் காவல்துறையினர், தன்னார்வலர்கள், வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு, தலைக்கவசம் அணிவதின் முக்கியத்துவம் குறித்து பேரணியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் திரு.இ.எஸ்.முருகேசன் (வடக்கு), திரு.ஏ.கே.முருகன் (தெற்கு) மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்