நாமக்கல் மாவட்டத்தில் 6,72,268 நபர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் (அல்பெண்டசோல்) வழங்கப்படுகிறது.
தேசிய குடற்புழு நீக்க முகாமினை தொடங்கி வைத்து
மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் நகராட்சி, அண்ணாசாலை,
அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (09.02.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தேசிய குடற்புழு நீக்க முகாமினை தொடங்கி வைத்து, பள்ளிக்குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது,
உலக மக்கள் தொகையில் 24% பேர் மண் மூலம் பரவும் குடற்புழு தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் மொத்த உலகளாவிய தொற்றுகளில் இந்தியா மட்டும் கிட்டத்தட்ட 25% பங்களிக்கிறது. மக்கள்தொகையில் 1 சதவீதம் பேர் திறந்தவெளியில் மலம் கழித்தால் கூட அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு குடற்புழு தொற்று ஏற்படலாம். தொற்றுடைய மண் மூலம், மண்ணில் விளையும் பொருட்கள் மூலம், மண்ணில் கை கால்கள் படுவதன் மூலம் மனிதர்களுக்கு குடற்புழு தொற்று ஏற்படுகிறது.
குடற்புழு தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுவாக அறிகுறிகள் இருக்காது. கடுமையான தொற்று உள்ளவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, பலவீனம், பசியின்மை போன்றவை ஏற்படும். மனிதன் சாப்பிடும் சாப்பாட்டில் உள்ள இரும்புத் சத்து, ஊட்டச்சத்து, வைட்டமின்கள் போன்றவற்றினை எடுத்துக் கொண்டு குடற்புழு வளர்கிறது. குடற்புழு தொற்றினால் இரும்புச் சத்து இழப்பு, இரத்த சோகைக்கு உள்ளாகி ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, அதனால் உடல் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் பாதிக்கப்படுகிறது.
குழந்தைகளுக்கு ஆல்பெண்டசோல் மருந்து உட்கொள்வதால் உடல் வளர்ச்சி அதிகரிப்பு, குழந்தையின் எடை அதிகரிப்பு, பிற நோய்த்தொற்றுகளுக்கு எதிர்ப்பு, மேம்படுத்தப்பட்ட அறிவாற்றல், மன மற்றும் உடல் வளர்ச்சியுடன் குழந்தைகளின் சிறந்த கற்கும் திறன் மற்றும் பள்ளி வருகையை அதிகரித்து, பள்ளிகளில் சுறுசுறுப்பாக இருத்தல் போன்ற நன்மைகள் ஏற்படுகிறது. மேலும் வாலிப வயதினர் மற்றும் பேறுகால மகளிர் ஆல்பெண்டசோல் மருந்து உட்கொள்வதால் சுறுசுறுப்பாக இருத்தல், பணியில் ஆர்வம், நீண்ட நேரம் வேலை செய்யும் திறன் மேம்படுதல் போன்ற நன்மைகள் ஏற்படுகிறது.
திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்த்தல், கழிவறைகளை பயன்படுத்துதல், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்தல், காய்கறி பழங்களை கழுவிய பின் உட்கொள்ளுதல், சுத்தமான குடிநீர், சுகாதாரமான உணவை உண்ணுதல், நகங்களை வெட்டி சுத்தமாக வைத்திருத்தல், காலணிகள் அணிதல் மற்றும் உணவுக்கு முன், கழிவறை பயன்படுத்திய பின் சோப்பு போட்டு கைகளை கழுவுதல் மூலம் குடற்புழு தொற்றை தடுக்கலாம்.
நாமக்கல் மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க முகாம் தமிழ்நாடு முழுவதும் இன்று (09.02.2024) நடைபெறுகிறது. விடுபட்ட குழந்தைகளுக்கு 16.02.2024 அன்று நடைபெறும். இம்முகாமினை நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இம்முகாமில் 1 முதல் 19 வயது வரையிலான சிறுவர்கள், கருவுறாத மற்றும் பாலூட்டாத 20 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும். இதில் 1 முதல் 2 வயது குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் 200மி.கி மாத்திரையும் 2 முதல் 19 வயது சிறுவர்கள் மற்றும் 20 முதல் 30 வயதுடைய பெண்களுக்கு 400மி.கி அண்பெண்டசோல் மாத்திரையும் வழங்கப்படும். இம்மாத்திரையை மதிய உணவிற்கு பிறகு உட்கொள்ள வேண்டும்.
இதற்காக நாமக்கல் மாவட்டத்தில் 1 முதல் 19 வயது வரை உள்ள 5,18,438 குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயது வரை உள்ள 1,53,830 பெண்களுக்கும், மொத்தம் 6,72,268 நபர்களுக்கு அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. மாவட்டத்திலுள்ள அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அல்பெண்டசோல் மாத்திரை வழங்கப்படுகிறது. விடுபட்ட குழந்தைகள் அனைவருக்கும் வருகின்ற 16.02.2024 அன்று இம்மாத்திரை எடுத்துக்கொண்டு குடற்புழு தொற்று மற்றும் இரத்த சோகை இல்லாத ஆரோக்கியமான வாழ்வை பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப.. அவர்கள் தெரிவித்தார்கள்.
தொடர்ந்து கை கழுவும் முறைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப.. அவர்கள் முன்னிலையில் மாணவ, மாணவியர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
இம்முகாமில் துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மருத்துவர்.க.பூங்கொடி, மாவட்ட கல்வி அலுவலர் திரு.ரவிச்சந்திரன், மாவட்ட தாய் சேய் நல அலுவலர் திருமதி தனலட்சுமி, குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் திருமதி.சவிதா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்