“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் நாமக்கல் வட்டத்தில்
அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு.
நாமக்கல் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்.
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் (31.01.2024) அன்று காலை 9.00 மணி முதல் நள்ளிரவு வரை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் மற்றும் பல்வேறு அரசுத்துறைகளை சார்ந்த மாவட்ட அளவிலான உயர் அலுவலர்கள் நாமக்கல் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து, இன்று (01.02.2024) காலை 6.00 மணி முதல் நாமக்கல் வட்டத்தில், பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் நாமக்கல் நகராட்சியில் தூய்மை பணிகள் மேற்கொள்ளும் தூய்மை பணியாளர்களின் வருகை மற்றும் வருகை பதிவேட்டினை ஆய்வு மேற்கொண்டு, தூய்மை பணிகளை முறையாக மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, நாமக்கல் நகராட்சியில் உள்ள உழவர் சந்தையில் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் விற்பனை செய்யப்படும் கீரை, காய்கறிகள், பழங்கள் விலை நிலவரங்கள் குறித்து கேட்டறிந்து, வார்டு 2, முதலைப்பட்டி பகுதியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு தயாரிக்கப்படும் உணவு கூடத்தில் ஆய்வு மேற்கொண்டு சமைப்பதற்கு தேவையான உணவுப் பொருட்களின் தரம், பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கை, உணவு பட்டியல் படி உணவு சமைக்கப்படுகிறதா என்றும், சமைக்கப்பட்ட உணவின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். மேலும், ஆவின் பால் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு பாலின் தரம் குறித்தும், தினசரி கொள்முதல் செய்யப்படும் பால் அளவு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், சின்ன வேப்பநத்தம், வசந்தபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு காலை உணவு தயாரிக்கப்படும் உணவு கூடத்தில், உணவு தரம் குறித்தும், பள்ளியில் குடிநீர், மின்வசதி, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பார்வையிட்டு, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு, உணவின் இருப்பு, வருகை விபரம், பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் வட்டம், விஐபி நகரில் நடைபெற்று வந்த தூய்மை பணிகளை பார்வையிட்டு, பொதுமக்களுடன் கலந்துரையாடி தூய்மை பணியாளர்களிடம் வழங்கப்படும் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரித்து வழங்க அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து, எர்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் சமைக்கப்பட்டிருந்த உணவை மாணவ, மாணவியர்களுக்கு பரிமாறினார்.
இந்த ஆய்வுகளில் ஆவின் பொது மேலாளர் திரு.சண்முகம், நாமக்கல் நகராட்சி ஆணையாளர் திரு.சென்னு கிருஷ்ணன், நகராட்சி பொறியாளர் திரு.எ.சண்முகம், வட்டாட்சியர் திரு.சக்திவேல் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்