மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட போதமலை மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று ரூ.140 கோடி மதிப்பீட்டில் 31 கி.மீ தொலைவிற்கு சாலை அமைக்கும் பணிக்கு 17.02.2024 அன்று அடிக்கல் நாட்ட உள்ளார்கள் - பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தகவல்.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், போதமலைக்கு சாலை அமைக்கும் பணியினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூ.140 கோடி மதிப்பீட்டில் 31 கி.மீ தொலைவிற்கு சாலை அமைக்கும் பணிக்கு 17.02.2024 அன்று அடிக்கல் நாட்ட உள்ளதை முன்னிட்டு, விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து, இன்று (14.02.2024) பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஆய்வு மேற்கொண்டார்.
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் கடல் மட்டத்திற்கு மேல் சுமார் 1,100 மீ உயரத்தில் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியான போதமலையில் கீழூர் ஊராட்சி அமைந்துள்ளது. கீழூர் ஊராட்சியானது கீழூர், மேலூர் மற்றும் கெடமலை ஆகிய மூன்று குக்கிராமங்களை 36.4 ச.கி.மீ (3,640 ஹெக்டர்) உள்ளடக்கியதாகும். கீழூரில் 119 குடியிருப்புகளும், 397 ஆண்கள், 395 பெண்கள் என மொத்தம் 792 நபர்கள், மேலூரில் 55 குடியிருப்புகளும், 225 ஆண்கள், 223 பெண்கள் என மொத்தம் 448 நபர்கள், கெடமலையில் 84 குடியிருப்புகளும், 242 ஆண்கள், 245 பெண்கள் என மொத்தம் 487 நபர்கள் என மொத்தம் 258 குடியிருப்புகளும் 864 ஆண்கள, 863 பெண்கள் என மொத்தம் 1,727 பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவ்வூராட்சியில் 1,202 வாக்காளர்கள் உள்ளனர்.
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் இம்மலைப்பகுதி குக்கிராமங்களுக்கு இந்நாளதுவரை சாலை வசதி இல்லை. சீரற்ற கரடுமுரடான மற்றும் மலைப்பாதையில் நடைபயணமாகவே சென்று வருகின்றனர். தங்களுக்கான அவசர மருத்துவ உதவிக்கு சுமார் 11 கி.மீ நடைபயணமாக மலைப்பகுதியில் நடந்துவந்து பின்பு அடிவாரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள இராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்கின்றனர். அவ்வாறு செல்லும்போது முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களை "டோலி" கட்டி தூக்கி வந்தே சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. இம்மலை கிராமத்தில் 2 அரசினர் பழங்குடியினர் நல உண்டு உறைவிட ஆரம்ப பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. பொது விநியோக கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கிட கீழூர் குக்கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்கள் நடைபயணமாக பயணம் செய்து தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்கின்றனர். தேர்தல் சமயங்களில் வாக்குச்சாவடி பொருட்களும் தலைச்சுமையாகவே எடுத்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
கீழூர் ஊராட்சியில் காலங்காலமாக இங்கு சிறுதானியங்களை பராம்பரிய முறையில் பயிரிட்டு வருகின்றனர். இங்கு பயிரிடப்படும் சிறுதானியங்கள் அதிக தரத்துடன் இருப்பினும் போதிய சாலை வசதிகள் இல்லாமையால் அருகில் உள்ள சந்தைகளுக்கு எடுத்து சென்று சந்தைபடுத்த இயலாத சூழ்நிலை உள்ளது. இச்சாலைகள் அமையும் போது இச்சிறுதானியங்களை சந்தைபடுத்தவும் அதிக அளவு உற்பத்தியை பெருக்கவும் வழிவகை ஏற்பட்டு இம்மக்களின் பொருளாதாரம் பன்மடங்கு உயரும்.
கீழுர், மேலூர், கெடமலை ஆகிய குக்கிராமங்களில் சாலை அமைப்பதன் மூலம் மலையில் வசிக்கும் 258 குடும்பங்களை சார்ந்த 1,727 நபர்களுக்கும், மலையில் விவசாயம் செய்துவரும் அடிவாரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் வசித்துவரும் சுமார் 800 குடும்பங்களை சேர்ந்த 3,500 நபர்களும் ஆக மொத்தம் 1,058 குடும்பங்களைச் சார்ந்த சுமார் 5,000-க்கும் மேற்பட்ட மக்கள் நேரடியாக பயன்பெறுவர்.
பசுமை தீர்ப்பாயம் ஒன்றிய அரசின் வனத்துறை, தமிழ்நாடு அரசின் வனத்துறை ஆகிய துறைகளிடம் அனுமதி பெற்று போதமைலை பகுதிக்கு சாலை அமைக்கும் பணிக்கு அனுமதி அளிக்கப்பட்ட பிறகு மாவட்ட ஊராட்சி துறை, வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் மூலம் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு நானும், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்களும் கொண்டு சென்றோம். இந்த கோரிக்கையினை ஏற்று நபார்டு திட்டத்தின் மூலம் ரூ.112 கோடியும், மாநில அரசின் பங்காக ரூ.28.00 கோடி என மொத்தம் ரூ.140 கோடி மதிப்பிலான நிதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சிகளினால் கிடைக்கப்பெற்றுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு நானும், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்களும் கொண்டு சென்றோம். இந்த கோரிக்கையினை ஏற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சிகளினால் ரூ.139.654 கோடி மதிப்பில் 31.07 கி.மீட்டருக்கு சாலை அமைத்திட அரசாணை எண். 104 நாள் 17.08.2023 ன் படி நபார்டு திட்டத்தின் கீழ் உத்தரவிடப்பட்டு வடுகம் முதல் மேலூர் வரை வழி கீழூர் பகுதிக்கு சுமார் ரூ.105.53 கோடி மதிப்பீட்டில் 21.17 கி.மீ தொலைவிற்கும், புதுப்பட்டி முதல் கெடமலை வரை ரூ.34.12 கோடி மதிப்பீட்டில் 9.90 கி.மீ தொலைவிற்கும் என மொத்தம் ரூ.139.65 கோடி மதிப்பீட்டில் 31.07 கி.மீ தொலைவிற்கு சாலை பணிக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வருகின்ற 17.02.2024 அன்று அடிக்கல் நாட்ட உள்ளார்கள்.
போதமலை பகுதிக்கு சாலை அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொண்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் அவர்களுக்கும், இந்த பகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும், இப்பகுதி மக்களின் சார்பாகவும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் திரு.ஆர்.எம்.துரைசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.எம்.சிவக்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் திரு.குமார் உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்