கல்வி பயில என்ன வேண்டும் கேளுங்கள், செய்வதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் -
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள்
மாணவ, மாணவியர்களுக்கு உறுதி
*****
நாமக்கல் மாவட்டம், நாமக்கல் நகராட்சி நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் இன்று (02.02.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தொழில் நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது :
நாமக்கல் நகராட்சி அறிவுசார் மையத்தில் தொழில் நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த அறிவுசார் மையத்தில் உள்ள வசதிகளை அனைவரும் அறிந்து கொண்டு உங்கள் பகுதியில் உள்ள மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் அதிகளவில் மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள் அடுத்தடுத்து நடைபெறவுள்ள தொழில் நெறி வழிகாட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன் பெற இயலும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாணவர்கள் போட்டி தேர்வுகளுக்கு தயாராக உதவும் வகையில் நாமக்கல், திருச்செங்கோடு, பட்டணம். பள்ளிபாளையம் மற்றும் மோகனூர்" ஆகிய 5 இடங்களில் அறிவுசார் மையங்களை ஏற்படுத்தியுள்ளார்கள். மேலும், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் இம்மையங்களில் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
இம்மையத்தின் சிறப்பு அம்சங்களாக ஒவ்வொரு மாணவர்களுக்கும் படிப்பதற்கு தனி தடுப்பு அமைப்பு வசதி, மாநில மற்றும் மத்திய அரசு போட்டித் தேர்வுகளுக்கான ரூ.10.00 இலட்சம் மதிப்புடன் கூடிய 3,000 எண்ணிக்கை நூல்கள் கொண்ட நூலக வசதி, மின் புத்தகங்கள் மூலம் படிப்பதற்கான இணைய இணைப்புடன் கூடிய இலவச கணினி வசதி, படிப்பதற்கு ஏற்ப அமைதியான சூழல், மகளிர்க்கான தனி கற்றல் பகுதி, குழந்தைகளுக்கான தனி வாசிக்கும் பகுதி, பயிற்சி கூடம் வசதி, தினசரி செய்தித் தாள்கள் வாசிக்கும் பகுதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிவறை வசதி, முதல் தளத்தில் குழு கலந்துரையாடல் பகுதி போன்ற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. திங்கள் முதல் ஞாயிறு வரை காலை 10 மணி முதல் மாலை 6.00 மணி வரை இம்மையங்கள் செயல்பட்டு வருகிறது. பிரதி வெள்ளிக்கிழமை வார விடுமுறை தினமாகும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சீரிய முயற்சியால் அனைத்து துறைகளும் முன்னேற்றம் அடைந்து வருகிறது. குறிப்பாக பள்ளிக்கல்வித்துறை மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையில் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். மேலும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இம்மாதம் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கலை கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அறிவுசார் மையங்களில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் திறன்மேம்பாட்டுதுறை மற்றும் மாவட்ட நூலகத்துறையின் பங்களிப்புடன் துவக்கமாக தொழில் நெறி வழிகாட்டும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சிகளில் ”போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான தாராக மந்திரம்" என்ற தலைப்பிலும், தொடர்ந்து ஏனைய அறிவுசார் மையங்களில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள ”போட்டித் தேர்வுகள் குறித்த பகுப்பாய்வு" என்ற தலைப்பிலும், "சுடராய் ஒளிர்வோம்" என்ற தலைப்பிலும், சிறப்பு பேச்சாளர்களை கொண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. எனவே போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள் மாவட்ட நிர்வாகத்தின் இது போன்ற முன்னெடுப்புகளை ஆக்கப் பூர்வமான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்களாகிய நீங்கள் தங்கள் மனசாட்சிக்கும் தங்களது பெற்றோர்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் முழு அர்ப்பணிப்புடன் கவனம் செலுத்தி நமது நாமக்கல் மாவட்டத்திற்கும் தங்களது பெற்றோர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
முன்னதாக இந்நிகழ்ச்சியில் திருச்சி அண்ணா மேலாண்மை பல்கலைக் கழக நெறியாளர் திரு.ந.சக்திவேல் அவர்கள், நுண்கலை வல்லுநர் திருமதி எம்.தமிழரசி அவர்கள் ஆகியோர் தொழில் நெறி வழிகாட்டல் குறித்து உரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் நாமக்கல் நகராட்சி தலைவர் திரு.து.கலாநிதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமதி பொ.மா.ஷீலா, உதவி இயக்குநர் (திறன்மேம்பாடு) திரு.பி.பார்த்திபன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.சதீஷ்குமார், நாமக்கல் நகராட்சி ஆணையாளர் திரு.கே.சென்னுகிருஷ்ணன், உதவி பொறியாளர் திரு.எம்.கண்ணன், அரசுத்துறை அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்