Hot Posts

6/recent/ticker-posts

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அமைவுள்ள இடத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அமைவுள்ள இடத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், அணைப்பாளையம் பிரிவில், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அமைவுள்ள இடத்தில் இன்று (20.02.2024) பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் புதிய மருத்துவமனை கட்டடம் அடிக்கல் நாட்டு விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், நாமக்கல் தலைமை அரசு மருத்துவமனை, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு பல்வேறு மருத்துவ வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அமைத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இராசிபுரம் பகுதியில் அமைக்கப்படும் என மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் 2023-ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் அறிவித்தார்கள். அதன்படி, இராசிபுரம் புறவழிச்சாலை பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு, ரூ.54.00 கோடி மதிப்பீட்டில் பொதுப்பணித்துறையினரால் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. வருகின்ற 24.02.2024 அன்று மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இராசிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்கள்.

இராசிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 300 படுக்கை வசதியுடன், மருந்தகம், சலவையகம், எக்ஸ்-ரே, எம்.ஆர்.ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, இரத்த வங்கி, மகப்பேறு பிரிவு, குழந்தைகள் சிகிச்சை பிரிவு, பிரேத பரிசோதனை பிரிவு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ வசதிகளுடன் தரை தளம் மற்றும் 6 தளங்களுடன் 1,17,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படவுள்ளது. 
 
இராசிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அருகில் உள்ள சேந்தமங்கலம், நாமகிரிப்பேட்டை, மங்கலபுரம், கொல்லிமலை, புதுச்சத்திரம், சேந்தமங்கலம், எலச்சிபாளையம் உள்ளிட்ட கடைக்கோடி பகுதியில் உள்ள பொதுமக்கள் மருத்துவ சிகிச்சைகள் பெற பயனுள்ளதாக இருக்கும். 

இம்மருத்துவமனை தேசிய நெடுஞ்சாலை அருகில் அமைவுள்ளதால் ஏதேனும் சாலை விபத்துகள் ஏற்பட்டால் உடனடியாக அவசர சிகிச்சை அளிக்கும் வகையிலும், பொதுமக்கள் எளிதில் வரும் வகையிலும் போக்குவரத்து வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இராசிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது இராசிபுரம் நகர்மன்ற தலைவர் முனைவர் கவிதா சங்கர், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் (பொ) திரு.த.முத்துராமலிங்கம், இணை இயக்குநர் மருத்துவ பணிகள் மரு.ராஜ்மோகன், துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.க.பூங்கொடி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரு.சச்சிதாநந்தம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்