பணியின் போது இறந்த வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும், சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகளையும் வழங்கினார்.
நாமக்கல் நகராட்சி, போக்குவரத்துத்துறை நாமக்கல் கிளை அலுவலகத்தில்,
இன்று (24.02.2024) போக்குவரத்துத்துறையில் பணியின் போது இறந்த 23 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும், சேலம் மண்டலத்தில் பணிக்காலத்தில் விபத்தில்லாமல் சிறப்பாக பேருந்துகளை இயக்கிய 80 ஓட்டுநர்களுக்கும், சிறப்பாக பணியாற்றிய 10 நடத்துநர் மற்றும் ஓட்டுநர்களுக்கு விருதுகளையும் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் ஆகியோர், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.பெ.இராமலிங்கம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர்
திரு.எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் பேசியதாவது:
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 2006 - 2011 ஆம் ஆண்டு ஆட்சி காலத்தில் 15,000 பேருந்துகளை வாங்கி வழங்கியது போக்குவரத்துத்துறை இன்றளவும் சிறப்பாக செயல்பட்டு வருவதற்கு முக்கிய காரணமாகும். போக்குவரத்து ஊழியர்களுக்கு நல்ல ஊதியத்தை வழங்கியவரும் இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் முதன்முறையாக பணியாளர்களுக்கு ஓய்வூதியத்தையும், அதற்கு அகவலைபடியையும் வழங்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.
அண்டை மாநிலங்களில் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சரியாக ஊதியம் இன்றளவும் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சரியான நேரத்தில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மகளிர் காண இலவச பேருந்து பயண சலுகை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். இத்திட்டத்திற்காக சென்ற ஆண்டு 2,800 கோடி ரூபாயும், இந்த ஆண்டு 3,500 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்து உள்ளார்கள். இதன் காரணமாக அரசு பேருந்தில் பயணம் செய்யும் மகளிர் சென்ற ஆண்டு 40% இருந்த நிலையில் இந்த ஆண்டு 65% சதவீதமாக உயர்ந்துள்ளது.
அது மட்டுமல்ல தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இலவச பஸ் பாஸ் திட்டத்திற்கு 1,521 கோடி ரூபாயும், டீசல் மானியத்திற்கு 1,300 கோடி ரூபாயும் என இந்த நிதியாண்டில் மட்டும் போக்குவரத்து துறைக்கு 6,371 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் போக்குவரத்து துறையை ஒரு சேவை துறையாக எண்ணி அதற்கு வழங்கி வருகிறார்கள்.
ஒன்றிய அரசு பல்வேறு முறை டீசல் கட்டணத்தை உயர்த்திய பொழுதும் அதனை காரணமாக கொண்டு பேருந்து கட்டணத்தை உயர்த்த கூடாது என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டு உள்ளார்கள். மகளிருக்காண இலவச பேருந்து பயண திட்டத்தின் மூலம் மகளிருக்கு மாதம் ரூபாய் 900 சேமிக்கப்படுகிறது என்று ஒரு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சிக்காலத்தில் கிராமங்கள் தோறும் பேருந்து சேவை வழங்கப்பட்டது. இதன் காரணமாக தமிழ்நாடு சமச்சீராக வளர்ச்சி பெற்று உள்ளது. குறிப்பாக கிராமங்களில் இருந்து வணிகத்திற்காகவும், படிப்பதற்காகவும், வேலைவாய்ப்புக்காகவும் கிராம மக்கள் நகரத்திற்கு எளிதாக வந்து செல்லும் வகையில் பேருந்து சேவை வழங்கப்பட்டு வருகிறது .
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பணிக்காலத்தின் போது இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி முதல் கட்டமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 136 வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளை தனது பொற்கரங்களால் வழங்கி தொடங்கி வைத்தார்கள். தொடர்ந்து 9 போக்குவரத்து கழகங்களிலும் முதல் கட்டமாக 750 பணியமான ஆணைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இரண்டாவது சுற்று பணி நியமன ஆணைகள் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோன்று நேரடி நியமனங்களை மேற்கொள்ள எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் முடிவுற்று விரைவில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு காலி பணியிடங்கள் நிரப்பப்படும். இன்றைய தினம் நடைபெறும் விழாவில் 25 ஆண்டுகள் விபத்து இல்லாமல் பேருந்துகளை சிறப்பாக இயக்கிய ஓட்டுனருக்கு தங்க காசும், பத்தாண்டுகள் விபத்து இல்லாமல் சிறப்பாக பேருந்துகளை இயக்கிய ஓட்டுனருக்கு வெள்ளிக் காசும் வழங்கப்படுகிறது. அனைத்து பணியாளர்களுக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் பேசியதாவது:
முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள மக்கள் நகரப் பகுதிக்கு சென்று வர சிற்றுண்டி சேவையை கொண்டு வந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். கலைஞர் வழியில் நல்லாட்சி செய்து வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது தேர்தல் வாக்குறுதியான மகளிருக்கான இலவச பேருந்து பயண சலுகை திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்கள். அது மட்டுமல்லாமல் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், அவர்களது உதவியாளர்களும் இத்திட்டத்தின் கீழ் இலவச பயணம் மேற்கொள்ள வழிவகை செய்துள்ளார்கள். இத்திட்டத்தினை மற்ற மாநிலங்கள் பின்பற்றும் வகையில் சிறப்பாக தமிழ்நாட்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றியுள்ளார்கள்.
இராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செம்மாண்டப்பட்டி கிராமத்தில் பேருந்து சேவை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். உடனடியாக மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களை தொடர்பு கொண்டு அக்கிராமத்திற்கு பேருந்து சேவை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டோம். அதன் அடிப்படையில் ஒரே வார காலத்தில் கிராமத்திற்கு பேருந்து சேவை வழங்கப்பட்டது. இன்றைய தினம் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்கின்றனர் என்றால் போக்குவரத்து பணியாளர்களின் சேவை மிகவும் இன்றியமையாததாகும். எனவே இன்றைய தினம் சிறப்பாக பணியாற்றி விருதுகளை பெறும் அனைத்து பணியாளர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் நாமக்கல் நகர மன்ற தலைவர் திரு.து.கலாநிதி, துணைத் தலைவர் திரு.செ.பூபதி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர் திரு.ஆர்.பொன்முடி, பொது மேலாளர் (சேலம்) திரு.ஆதப்பன் துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், போக்குவரத்து துறை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்