பள்ளிபாளையம் பிப்ரவரி-9
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள வால்ராசம்பாளையம் பகுதியில் செயல்படும் விசைத்தறி உரிமையாளர்கள், முறையான கூலி உயர்வை அமுல்படுத்தவில்லை எனக் கூறி 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிஐடியு தொழிற்சங்க அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள வால்ராசம்பாளையம் பகுதியில், செயல்படும் ஏரோ டெக்ஸ், விசைத்தறி கூடத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பணியாற்றி வரும் நிலையில், முறையான கூலி தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்று அங்கு பணியாற்றும் விசைத்தறி தொழிலாளர் குடும்பத்தினர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர் .
இதனை அடுத்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், விசைத்தறி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உடனடியாக சம்பள பாக்கி ,கூலி உயர்வு, போனஸ் ஆகியவற்றை வழங்க வேண்டும்.! தொழிலாளர் நல சட்டங்களை அமுல்படுத்த வேண்டும் என திருச்செங்கோடு கோட்டாட்சியர் டிஎஸ்பி ஆகியோர் முன்னிலையில் திருச்செங்கோட்டில் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது .
கடந்த சில மாதங்களாக தொழிலாளர்கள் தொடர்ந்து பணிபுரிந்து வந்த நிலையில், தொழிலாளர் விரோத போக்குடன் விசைத்தறி பட்டறை உரிமையாளர்கள், அதிகாரிகள் முன்னிலையில் போடப்பட்ட ஒப்பந்தத்தை அமல்படுத்தவில்லை. இந்நிலையில் இதுகுறித்து சிஐடியு தொழிற்சங்கத்தினர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வெப்படை பேருந்து நிறுத்த பகுதி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், பாதிக்கப்பட்ட சுமார் எட்டு குடும்பங்களை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விசைத்தறி உரிமையாளர்கள் புதிய ஒப்பந்தம் எதையும் அமல்படுத்தாமல், பழைய நிலையிலேயே கூலியை வழங்குகின்றனர். சட்ட சலுகைகள் வழங்காமல் தொழிலாளர்களை மிரட்டி வேலை வாங்குகின்றனர்.ஏதேனும் கேள்வி கேட்டால் ஆபாச வார்த்தைகளால் திட்டுவது, மிரட்டுவது போன்ற செயல்களை தொடர்ந்து செய்து வருகின்றனர். இனிமேல் அந்த விசைத்தறி கூடத்தில் பணிபுரிய எங்களுக்கு விருப்பமில்லை என கூறி, காவேரி ஆர்.எஸ்,பகுதியில் அமைந்துள்ள சிஐடியு தொழிற்சங்க அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர்.
இதனை அடுத்து சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் சட்டரீதியாக அவர்களுக்கு உதவும் பொருட்டு ,அரசு அதிகாரிகளை தொழிலாளர்களுடன் நேரில் சந்தித்து மனு வழங்கி பிரச்சனைக்கு உரிய தீர்வுக்கு தீர்வு எட்டுவதற்கான பணிகளை தொழிற்சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
0 கருத்துகள்