மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி வேண்டுகோள்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் மக்களவை பொதுத்தேர்தல் 2024 மார்ச் 16 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தேர்தல் நாளான ஏப்ரல் 19 (வெள்ளிக்கிழமை) அன்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வாக்களிக்க தகுதியுடைய அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் நாள்தோறும் நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி, 6 சட்டமன்ற தொகுதிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, மனிதசங்கிலி, பேரணிகள், துண்டு பிரசுரம் வழங்குதல், செல்ஃபி ஸ்டேண்டு, ஒட்டுவில்லைகள், கடைகளில் உள்ள இரசீதுகள், துணி பைகள், பொது விநியோக கடைகளில் வழங்கப்படும் பொருட்கள், விளம்பர பதாகைகள், சமையல் எரிவாயு உருளைகளில் தேர்தல் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை ஒட்டுதல், தேர்தல் வாக்குபதிவு அழைப்பிதழ் தாம்பூலம் தட்டுடன் வழங்குதல், விழிப்புணர்வு வாசகம் பொறிக்கப்பட்ட பலூன்கள் பறக்கவிடுதல், விழிப்புணர்வு பிரச்சார வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய வழிகளில் பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்தொடர்ச்சியாக, நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சங்ககிரி வட்டாட்சியர் அலுவலகம் அருகில் இன்று (29.3.2024) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆப அவர்கள் மக்களவைத் தேர்தல் - 2024 முன்னிட்டு 'தேர்தல் பருவம் - தேசத்தின் பெருமிதம்" என்ற தலைப்பில் வாக்காளர்களுக்கு 100 சதவிகிதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, தேர்தலில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த செல்ஃபி ஸ்டேண்ட் பார்வையிட்டு பொதுமக்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். மேலும், தேர்தல் நாள் 19.4.2024 அன்று வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்கள் மற்றும் பேருந்தில் பயணிகளுக்கு வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, சங்ககிரி வட்டம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், வைகுந்தம் பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடியாக கண்டறியப்பட்ட அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆப அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
0 கருத்துகள்