திருமதி என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள் தொல்குடியினர் வேளாண்மை மேலாண்மை திட்டத்தினை தொடங்கி வைத்து தகவல்.
நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில், பழங்குடியினர் நலத்துறை சார்பில், இன்று (06.03.2024) மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திருமதி என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் திருமதி ஜி.லட்சுமி பிரியா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எ.கே.பி.சின்ராஜ் அவர்கள், நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள், பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் திரு.எஸ்.அண்ணாதுரை ம.தொ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில், தொல்குடியினர் வேளாண்மை மேலாண்மை திட்டத்தினை தொடங்கி வைக்கும் விதமாக இலச்சினையை வெளியிட்டு, ரூ.6.63 கோடி மதிப்பில் 672 பயனாளிகள் மற்றும் 7,000 விவசாய பெருமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். தொடர்ந்து, அரசு திட்டங்களை செயல்படுத்தும் பொருட்டு 6 அரசு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திருமதி என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள் முன்னிலையில் கையெழுத்தானது.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திருமதி என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள் தெரிவித்ததாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார்கள். மேலும், சமூகத்தில் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு பழங்குடியின மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திடும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி சமூக நிதி ஆட்சியை நடத்தி வருகின்றார்கள். அந்த வகையில் இன்றைய தினம் தொல்குடியினர் வேளாண்மை மேலாண்மை திட்டத்தினை தொடங்கி வைக்கப்பட்டு, அரசு திட்டங்களை செயல்படுத்தும் பொருட்டு 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. மேலும் ஒரு சமூகம் முன்னேற கல்வி மிக முக்கியம். அதன் அடிப்படையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், 320 உண்டி உறைவிட பள்ளிகள், 8 ஏகலைவா பள்ளிகள், 48 விடுதிகள் நடத்தப்பட்டு வருகிறது. விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பழங்குடியின மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு, பொது தேர்வில் பள்ளி கல்வித்துறையை விட 10 சதவிகிதம் கூடுதால தேர்ச்சி பெற்றுள்ளார்கள். இம்மாணவ, மாணவியர்கள் பள்ளி கல்வியுடன் நின்றுவிடாமல் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி பயில பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இச்சிறப்பு பயிற்சிகள் மூலம் தற்போது அதிக அளவில் மாணவ, மாணவியர்கள் எம்.ஐ.டி, என்.ஐ.டி, ஐ.ஐ.டி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பயின்று வருகின்றார்கள்.
அதுமட்டுமின்றி வெளிநாடுகளில் சென்று பயில வேண்டும் என்ற மாணவ, மாணவியர்களின் கனவை நனவாக்கும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி இந்தாண்டு 31 மாணவ, மாணவியர்கள் வெளிநாடுகளில் கல்வி பயின்று வருகின்றார்கள். இதற்கான செலவினத்தொகையை ரூ.36.00 இலட்சம் வரை தமிழ்நாடு அரசே செலுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் குரூப் -1 முதல்நிலை தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.1.00 இலட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு மருத்துவம் பயில தாட்கோ மூலம் குறைந்த வட்டியில் கல்வி கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.
பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை பொருளாதார ரீதியாக உயர்த்திடும் வகையில் சுயத்தொழில் தொடங்கிட அரசு 50 சதவிகிதம் வரை மானியத்தில் விவசாயம் மேம்படுத்திட டிராக்டர், சோலார் உலர் கலன் உள்ளிட்ட பல்வேறு வேளாண் உபகரணங்களை வழங்கி வருகிறது. மேலும், பழங்குடியின மக்களை அதிக அளவில் தொழில் முனைவோர்களாக உருவாக்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டத்தை செயல்படுத்திட ரூ.100.00 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். தொழில் முனைவோர்களுக்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் ரூ.50.00 இலட்சம் முதல் ரூ.60.00 இலட்சம் வரை கடனுதவி 35 சதவிகித அரசு மானியத்துடன் வழங்கப்படுகிறது. 65 சதவிகிதம் வரை வங்கி கடனுதவியையும் அரசே ஏற்படுத்தி தருகிறது.
பழங்குடியினரின் அடிப்படை தொழில் விவசாயம். எனவே, மலை பகுதிகளில் விவசாயம் செய்து வரும் மக்கள் தங்களது உற்பத்தி பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக சந்தைபடுத்துவது, தரம் உயர்த்துதல், தங்கள் நிலத்தில் எத்தகைய பயிர்களை விளைவித்தால் நன்கு இலாபம் பெற முடியம் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட ஐந்திணை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு திட்டங்களை செயல்படுத்தும் பொருட்டு அரசு சார்ந்த 6 நிறுவனங்களுடன் இன்றைய தினம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசு பழங்குடியினருக்கு நவீன தொழில் நுட்பங்களையும், வேளாண் கருவிகள் வழங்கப்படுகிறது. இதனை தங்கள் வேளாண் வளர்ச்சிக்கும், கருவிகளை வாடகைக்கு வழங்கியும் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள முடியும்.
விவசாய கூலி தொழில் செய்து வருபவர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கிட பல்வேறு மானிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ், அரியலூர் மாவட்டத்தில் முந்திரி உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்திடும் தொழிலில் சுமார் 2,500 விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அதுபோல நாமக்கல் மாவட்டத்தில் மிளகு அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது மக்களிடையே சிறுதானிய பயன்பாடு அதிகளவில் உள்ளது. அதற்கேற்றார் போல் சிறுதானிய உற்பத்தியில் நாம் ஈடுபடவேண்டும். பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திட ரூ.1000 கோடியில் தொல்குடி திட்டத்தை செயல்படுத்தி உள்ளார்கள். நாமக்கல் மாவட்டத்தில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்கள் அதிகளவில் உள்ளார்கள். இங்கு 5 விடுதி, 5 சமுதாய கூடம் கட்டப்பட்டுள்ளது. மேலும் 2 விடுதிகள் கட்ட ரூ.15.00 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு நாமக்கல் மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திருமதி என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், 18 பயனாளிகளுக்கு ரூ.91.26 இலட்சம் மதிப்பீட்டில் வீடற்ற பழங்குடியின மக்களுக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளையும், 200 பயனாளிகளுக்கு ரூ.70.00 இலட்சம் மதிப்பீட்டில் இலவச கறவை மாடுகளையும், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.1.34 இலட்சம் மதிப்பீட்டில் தையல் இயந்திரங்களையும், தாட்கோ துறையின் சார்பில் 2 தமிழ்நாடு சிமெண்ட் விற்பனை முகவர்களுக்கு ரூ.15.00 இலட்சம் மதிப்பில் கடனுதவிகளையும், 38 பயனாளிகளுக்கு ரூ.2.32 கோடி மதிப்பீட்டில் பழங்குடியின தொழில் முனைவோருக்கான நலத்திட்ட உதவிகளையும், 67 நபர்களுக்கு தூய்மை பணிபுரிவோர் நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டைகளையும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் 135 பயனாளிகளுக்கு ரூ.32.40 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 16 மகளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்த 192 உறுப்பினர்களுக்கு ரூ.1.70 கோடி மதிப்பில் வங்கி கடனுதவிகளையும், வேளாண் பொறியியல் துறை சார்பில் 7,000 விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.50.00 இலட்சம் மதிப்பில் பெரப்பன்சோலை, எடப்புளிநாடு பூர்வமலை பழங்குடியினருக்கு வேளாண் இயந்திரங்களையும் என மொத்தம் 672 பயனாளிகள் மற்றும் 7,000 விவசாய பெருமக்களுக்கு ரூ.6.63 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திருமதி என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள் வழங்கினார்.
மேலும், திறன் மேம்பாடு பயிற்சிக்காக 50 பழங்குடியின மாணவ, மாணவியர்கள் பெங்களூர் செல்லும் பேருந்தினை மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திருமதி என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நாமக்கல் நகர் மன்றத்தலைவர் திரு.து.கலாநிதி, துணைத்தலைவர் திரு.செ.பூபதி, ஆதிதிராவிடர் நலத்துறை கூடுதல் செயலாளர் திருமதி உமா மகேஸ்வரி, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.பார்த்தீபன், பதிவாளர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (சென்னை) டாக்டர் பி.டென்சிங் ஞானராஜ், பேராசிரியர் மற்றும் துணைத்தலைவர், அண்ணா பல்கலைக்கழகம் (சிதம்பரம்) முனைவர் எஸ்.அறிவுடைநம்பி, தலைவர் மத்திய வேளாண்மை பொறியியல் நிறுவனம் மரு.ரவீந்திரா நாயக், முதன்மை அறிவியலாளர் இந்திய சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனம் (ஹைதராபாத்) முனைவர் ஆ.கலைசேகர், முதல்நிலை விஞ்ஞானி இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் (பெங்களூர்) முனைவர் ஆர்.செந்தில் குமார், இயக்குநர் (பொ) மத்திய உவர் நீர் மீன் வளர்ப்பு நிறுவனம், (சென்னை) டாக்டர் பி.சி.பாலசுப்பரமணியன், பழங்குடியினர் நலத்துறை இணை இயக்குநர் திரு. சுரேஷ் குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திரு.வெ.முருகன், பழங்குடியினர் திட்ட அலுவலர் திரு.தே.பீட்டர் ஞானராஜ் உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்