வழங்க நடவடிக்கை - பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள்
5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி சிறப்பு முகாமினை தொடங்கி வைத்து தகவல்.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் இன்று (03.03.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி சிறப்பு முகாமினை தொடங்கி வைத்தார்.
இம்முகாமில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்
திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்ததாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, நாமக்கல் மாவட்டத்தில் 1,15,600 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இப்பணிக்காக கிராமப்பகுதியில் 1170 முகாம்களும் நகராட்சி பகுதியில் 208 முகாம்களும், மொத்தம் 1378 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பணிக்காக பொது சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், சத்துணவு, பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, ரோட்டரி சங்கம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் என சுமார் 4418 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையம், இரயில் நிலையம், சந்தைகள், சினிமா அரங்குகள், கோயில்கள், சுங்கச்சாவடி போன்ற இடங்களில் 48 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. சமுதாயத்தில் பின் தங்கியுள்ள மக்களான நாடோடிகள், நரிக்குறவர்கள், கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் போக்குவரத்து வசதி இல்லாத மலை கிராமங்களில் உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில் 27 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக சுகாதாரத்துறை மற்றும் பிற துறை சார்ந்த 42 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, 04.03.2024 நாளை முதல் 09.03.2024 வரை விடுபட்ட ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.
இந்தியாவில் 2011-ம் ஆண்டு இறுதியாக போலியோ நோய் பதிவு செய்யப்பட்டது. உலக சுகாதார நிறுவனம் 2014-ம் போலியோ இல்லாத இந்தியா என சான்று அளித்தது. எனினும் நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் போலியோ தொற்று இன்று வரை இருப்பதினால், வருடத்திற்கு ஒருமுறையாவது
5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அரசு வழங்கும் போலியோ சொட்டு மருந்து தரமானது, வீரியமிக்கது, பாதுகாப்பானது. எனவே மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், குறிப்பாக தாய்மார்கள் தங்கள் வீடுகளில் உள்ள அன்று பிறந்த குழந்தை முதல்
5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் மீண்டும் தற்போது நடைபெறும் முகாம்களில் அளிக்கப்படும் போலியோ சொட்டு மருந்து வழங்கி போலியோ இல்லாத சமுதாயத்தை உருவாக்க ஒத்துழைப்பு நல்க வேண்டும் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, ராசாம்பாளையம் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள சுங்க சாவடி மையத்தில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் வாகனங்களில் வரும் பொது மக்களின் குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.பெ.ராமலிங்கம் அவர்கள் முன்னிலையில் போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.
மேலும், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், ஆரியூரில் ரூ.12.61 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையத்தினை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எ.கே.பி.சின்ராஜ் அவர்கள், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.பெ.ராமலிங்கம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்து, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.
இம்முகாமில் இராசிபுரம் நகர்மன்றத் தலைவர் முனைவர் கவிதா சங்கர், இராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திரு.கே.பி.ஜெகநாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.சு.வடிவேல், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் திரு.குமார், இணை இயக்குநர் மருத்துவ பணிகள் மரு.அ.ராஜ்மோகன், துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.க.பூங்கொடி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்