Hot Posts

6/recent/ticker-posts

மக்களவைத் தேர்தல் – 2024 - தேர்தல் பணிகள் மேற்கொள்ள பொறுப்பு மற்றும் உதவி பொறுப்பு அலுவலர்களாக 61 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் - நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள் தகவல்.

மக்களவைத் தேர்தல் – 2024 - தேர்தல் பணிகள் மேற்கொள்ள 
பொறுப்பு மற்றும் உதவி பொறுப்பு அலுவலர்களாக 61 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் - நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள் தகவல்.  

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (19.03.2024) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள் தலைமையில் மக்களவைத் தேர்தல் –2024 முன்னிட்டு பொறுப்பு அலுவலர்களுடன் (Nodal Officers) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில், மக்களவைத் தேர்தல் –2024-ஐ சிறப்பாக நடத்தி முடித்திட தேர்தல் தொடர்பான பணிகள் மேற்கொள்ள 29 பொறுப்பு அலுவலர்கள் உடன் பணியாற்றும் வகையில் 32 உதவி பொறுப்பு அலுவலர்கள் என மொத்தம் 61 அலுவலர்கள் நியமிக்கப்பட்டு ஒருங்கிணைப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் தொடர்பான பணிகளை திட்டமிடுதல், குறுந்தகவல் மற்றும் தகவல் தொடர்பு , மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மேலாண்மை, தேர்தல் தொடர்பான புகார்களை கையாளும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை, வாக்கு எண்ணிக்கை மையம், வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடிகள், ஊடக மையம் மற்றும் ஊடக சான்றளிப்பு கண்காணிப்பு குழு, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, பறக்கு படை குழுக்கள், பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடு செய்தல், தேர்தல் தொடர்பான பொருட்கள் மற்றும் போக்குவரத்து மேலாண்மை, தேர்தல் தொடர்பான பயிற்சி, மின்னணு வாக்கு பெட்டிகள் வைக்கும் பாதுகாப்பு அறை, தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு உள்ளிட்ட பணிகளுக்கு நியமிக்கப்பட்ட அலுவலர்களுக்கு ஆலோசனைகளும், அறிவுரைகளும் வழங்கப்பட்டது.  

வாக்காளர் யாருக்கு வாக்களித்தார் என்பதை உறுதி செய்யும் இயந்திரம் (VVPAT) பயன்படுத்தப்படவுள்ளது. இவ்வியந்திரம் பயன்பாடு குறித்து அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். எனவே தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரும் மிகுந்த கவனத்துடனும், அக்கறையுடனும் செயல்பட்டு எவ்வித தொய்வுமின்றி தேர்தலை சுமூகமாக நடத்திட அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர்.ரெ.சுமன், கூட்டுறவு சங்கங்கள் இணைபதிவாளர் திரு.க.பா.அருளரசு, திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திரு.சு.வடிவேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.த.மாதவன் உட்பட பொறுப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்