ரூ.26.75 கோடி மதிப்பீட்டில் 2 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் பெருமிதம்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் ரூ.23.75 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டும் பணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் இன்று (16.03.2024) நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எ.கே.பி.சின்ராஜ் அவர்கள், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் திரு.எஸ்.எம்.மதுரா செந்தில் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் பணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர்
ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சிகளினால் நாமக்கல் மாவட்டத்திற்கு அதிகப்படியான திட்டங்கள், அறிவிப்புகள் வழங்கி வருகின்றார்கள். அந்த வகையில் நேற்றையதினம் மட்டும் இரண்டு அறிவிப்புகளை அறிவித்துள்ளார்கள். நாமக்கல் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தியும், இரா.புதுப்பாளையம், கட்டணாச்சம்பட்டி, கல்லாங்குளம், சானார்புதூர், பனங்காட்டூர் உள்ளிட்ட கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் தடையில்லாத மின்சாரம் வேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்று தற்போது 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க ஆணை பிறப்பித்து, இன்றையதினம் புதுப்பாளையம் 22 கி.வோ பீடரை கிராமபுற வகைபாட்டில் இருந்து நகர்புற வகைபாடாக தரம் உயர்த்தி 24 மணி நேரமும் தொடர்ந்து சீரான தடையற்ற மும்முனை மின்சார விநியோகத்தை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், 1991 ஆம் ஆண்டிற்கு பிறகு உருவாக்கப்பட்ட புதிய மாவட்டங்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் உருவாக்கப்படவில்லை. ஆனால் நாமக்கல் மாவட்டத்திற்கு மட்டும் புதிதாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு திங்கட்கிழமை அன்று அதற்கான நிர்வாகம் பதவியேற்பு விழா நடைபெற்றது. சென்னை கன்னியாகுமரி தொழில் வழி தடம் திட்டத்திற்கு தேவையான நிதி உரிய நேரத்தில் ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் இத்திட்டத்திற்கு ரூ.114.00 கோடி கூடுதல் நிதியாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒதுக்கி உள்ளார்கள். பரமத்தி அரசு மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் தரைதளம் மற்றும் நான்கு தளத்துடன் அமைக்கப்பட உள்ளது. இக்கட்டடத்தில் மூன்று அறுவை சிகிச்சை பிரிவும் அமையப் பெற உள்ளது. நவீன டயாலிசிஸ் பிரிவும் அமைக்கப்பட உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் 8 அரசு மருத்துவமனைகளும், ஆனால் இந்த பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனை கடந்த ஆண்டு மட்டும் காப்பீட்டு திட்டத்தில் ரூ.50.00 இலட்சம் ரூபாய் ஈட்டியுள்ளது. 9 மருத்துவர்களை கொண்டு அதிக நிதி ஆதாரங்களை ஈட்டி உள்ளது என்பது பாராட்டுக்குரியதாகும். மருத்துவர்களின் சிறந்த சேவையின் காரணமாக இந்த நிதி ஆதாரங்களை பெற முடிந்துள்ளது. விபத்து நடந்த 6 மணி நேரத்திற்குள் அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு உயிரிழப்பை தவிர்க்க தேவையான அனைத்து கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
”இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டத்தில்” சிகிச்சை அளிப்பதற்காக ரூ.1.00 இலட்சத்திலிருந்து ரூ.2.00 இலட்சமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலைமைச்சர் அவர்கள் உயர்த்தி உத்தரவிட்டுள்ளார்கள். தமிழ்நாடு மாநிலம் சுகாதாரத்துறையில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக விளங்கிடும் வகையில் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தனியார் மருத்துவமனைக்கு இணையாக மருத்துவ சேவைகளை வழங்கி வரும் பரமத்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பணியாளர்கள் அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் தெரிவித்துக்கொள்கிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இராசிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ரூ.54.00 கோடி ரூபாயும், திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு இணையான மருத்துவ வசதிகளை பெற ரூ.23.00 கோடி ரூபாயும், தற்பொழுது பரமத்தி அரசு மருத்துவமனையில் ரூ.23.75 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு இவ்வாறாக நாமக்கல் மாவட்டத்திற்கு மக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். இதனை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் ரூ.23.75 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டும் பணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் அடிக்கல் நாட்டினார். பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையானது தரைதளம், முதல் தளம், இரண்டாம் தளம், மூன்றாம் தளம் மற்றும் நான்காம் தளம் என 41178.40 ச.அடியில் கட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள் காத்திருப்பு அறை, வெறிப்புற நோயாளிகள் அறை (விபத்து பகுதி), சிறிய அறுவை சிகிச்சை அறை, காவல் துறை விசாரணை அறை, உயிர் மருத்துவ கழிவுகள் அறை, சி.டி.ஸ்கேன் அறை, மின் அறை, சாய்வுதளம், மகப்பேறு பிரிவு, இரத்த வங்கி உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்படவுள்ளது.
மேலும், நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் மோகனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் கட்டும் பணிக்கு நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எ.கே.பி.சின்ராஜ் அவர்கள், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.பெ.ராமலிங்கம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் அட்மா குழுத் தலைவர் திரு.நவலடி, கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் திரு.சண்முகம், வேளாண்மை இணை இயக்குநர் திரு.சு.துரைசாமி, இணை இயக்குநர் மருத்துவ பணிகள் (பொறுப்பு) திரு.வாசுதேவன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.இராமச்சந்திரன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்