Hot Posts

6/recent/ticker-posts

நாமக்கல் மாவட்டத்திற்கென ரூ.90.00 கோடி மதிப்பீட்டில் தானியங்கி நவீன பால் பண்ணை டென்மார்க் தொழில் நுட்பத்துடன் அமைக்கப்படவுள்ளது

நாமக்கல் மாவட்டத்திற்கென ரூ.90.00 கோடி மதிப்பீட்டில் தானியங்கி நவீன பால் பண்ணை டென்மார்க் தொழில் நுட்பத்துடன் அமைக்கப்படவுள்ளது.
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் ரூ.5.57 இலட்சம் மதிப்பில் 46 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி தகவல்.

 நாமக்கல் மாவட்டம், லத்துவாடி, புதிய கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று (05.03.2024) பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.பெ.ராமலிங்கம் அவர்கள் முன்னிலையில் ரூ.5.57 இலட்சம் மதிப்பில் 46 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்ததாவது,

 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விவசாய பெருமக்களின் நலன் கருதி வேளாண்மை துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிய கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்கள். 

 மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் ஆய்வின் போது நாமக்கல் நகர் பகுதியில் இயங்கி வந்த கால்நடை மருத்துவமனையை லத்துவாடியில் கால்நடை கல்லூரி வளாகத்தில் அமைத்திட வேண்டுமென்று, குறுகிய காலத்தில் திட்ட அறிக்கை தயாரித்து, அரசிடம் நிதி ஒதுக்கீடு பெற்று அடிப்படை கட்டமைப்பு பணிகளை வேகமாக முடித்து கால்நடை மருத்துவமனையை இப்பகுதிக்கு கொண்டு வந்துள்ளர்கள். இதன் மூலம் வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த கால்நடை மருத்துவமனை தற்போது சொந்த கட்டடத்தில் இயங்கி வருகிறது. அதுமட்டுமின்றி நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனை கட்டடம், தனியார் மருத்துவமனையை விட சிறப்பாக கட்டப்பட்டு அதிக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு மருத்துவ வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. மேலும் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.7.00 கோடி மதிப்பீட்டில் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
  
லத்துவாடியில் செயல்பட்டு வரும் புதிய கால்நடை மருத்துவ கல்லூரியில் செயல்பட்டு வரும் மருத்துவமனையால் சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாய பெருமக்கள் போக்குவரத்து சிரம்மின்றி, தாங்கள் வளர்க்கும் கால்நடைகளான ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவற்றிக்கு எளிதில் சிகிச்சை பெற்று பயன்பெறுவார்கள். இப்பகுதியில் வேளாண் ஆராய்ச்சி மையத்தில் பயிர்கள், மற்றும் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் தொற்றுகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் விவசாயிகள் தங்கள் பயிர்கள் மற்றும் கால்நடைகளுக்கு நோய்தடுப்பு நடவடிக்கை குறித்து விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.  

நாமக்கல் மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.50 இலட்சம் லிட்டர் முதல் 2.00 இலட்சம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்பட்டு சேலம் பால் பண்ணைக்கு தான் அனுப்பபடுகிறது. இதனால் பால் பாக்கெட் தயாரித்தல் பணிகளுக்காக செலவின தொகை கொள்முதல் விலையிலிருந்து ரூ.3.00 வழங்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் தனி பால் பண்ணை அமைக்கப்படுவதால் விவசாயிகளுக்கு கூடுதலாக வருமானம் கிடைக்கும். இதனால் நாமக்கல் மாவட்டத்திற்கென நவீன பால் பண்ணை நிலையம், தனி செயல்பாட்டு அலகு டென்மார்க் தொழில் நுட்பத்துடன் ரூ.90.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது. இம்மையத்தில் சுத்திகரிப்பு நீரானது சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் மறுச்சுழற்சி முறையில் பயன்படுத்தப்படவுள்ளது. இந்த வகை நவீன பால் குளிரூட்டும் அமைப்பு தமிழ்நாட்டில் வேறெங்கும் இல்லை. இதற்காக நாடாளுமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஒன்றிய அரசிடமிருந்து ரூ8.00 கோடி மானியமாக பெறப்பட்டுள்ளது. இம்மையம் அமைக்க குஜராத்தில் இயங்கி வரும் என்.டி.டி.பி நிறுவனத்திடம் நேரில் சென்று பணிக்கான அறிக்கை தயாரிக்கப்பட்டு பணிகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக ரூ.90.00 கோடியில் பணிகள் தொடங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனுமதி அளித்துள்ளார்கள்.

ஊரக பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு கால்நடை துறையும், கூட்டுறவு துறையும் தான் முக்கிய பங்காற்றுகின்றன. கால்நடைகள் தான் விவசாயிகளின் உற்ற நண்பன். விவசாயிகள் கால்நடைகள் மூலம் தங்களுக்கு கூடுதலாக வருமானம் ஈட்டி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் மக்களுக்கான அனைத்து அடிப்படை தேவைகளையும், அரசின் திட்டங்களையும் சட்டத்திற்குட்பட்டு வேகமாக கொண்டு சேர்க்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்தார். 

தொடர்ந்து, நாய் கடித்து ஆடுகள் இறந்ததற்காக 42 நபர்களுக்கு ரூ.3.40 இலட்சம் மதிப்பீட்டில் இழப்பீடு தொகையையும், 1 பயனாளிக்கு ரூ.50,000/- மதிப்பில் சீரியல் செட் கடை தீப்பற்றியதற்காக இழப்பீடு தொகையையும், 1 மாணவருக்கு ரூ.50,000/- கல்வி உதவித்தொகையையும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6,400/- மதிப்பில் உதவி உபகரணங்களையும், தலா ரூ.50,000/- வீதம் உதவித்தொகையையும் என மொத்தம் 46 பயனாளிகளுக்கு ரூ.5.56 இலட்ட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் வழங்கினார்.
 
இந்நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் மருத்துவர் எம்.செல்வராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.சு.வடிவேல், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.ச.பிரபாகரன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் திரு.குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திரு.வெ.முருகன், உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்