கூட்டுறவு வங்கி தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள்
கொல்லிமலையில் வாழும் மலைவாழ் மகளிருக்கு இலவச பேருந்து
விடியல் பயண சேவையை தொடங்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்ட, கொல்லிமலை, செம்மேட்டில் இன்று (14.3.2024) பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.பொன்னுசாமி அவர்கள் முன்னிலையில், கொல்லிமலையில் வாழும் மலைவாழ் மகளிருக்கு இலவச பேருந்து விடியல் பயண சேவை மற்றும் மூத்த குடிமக்களுக்கு இல்லம் தேடி மருத்துவ சேவை வழங்கும் மருத்துவ வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/ நாமக்கல் மாவட்ட
மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்ததாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் அறிக்கையில் அறிவித்தப்படி, தமிழ்நாடு முழுவதும் மகளிர் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் விடியல் பயணத்திட்டத்தை வெற்றிக்கரமாக செயல்படுத்தி வருகின்றார்கள். தற்போது, இத்திட்டம் மலைபகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி, கொல்லிமலை பகுதியில் வசிக்கும் மகளிர் இங்குள்ள மலை கிராமங்களுக்கு இலவசமாக நகர பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளலாம். இத்திட்டத்திற்கான தொகையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் போக்குவரத்து துறைக்கு செலுத்தி உள்ளார்கள்.
அதுமட்டுமல்லாமல், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொரோனா காலத்தில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.4,000/-வழங்கியது, விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தள்ளுபடி, மகளிருக்கு மாதம் ரூ.1,000/- வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத்திட்டம், உயர்கல்வி பயில மாதம் ரூ.1,000/- வழங்கும் புதுமைப்பெண் திட்டம், மகளிருக்கு பேருந்துகளில் இலவச விடியல் பயணம், அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பசியினை போக்கிட காலை உணவுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். தேர்தல் முடிந்த பிறகு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் வீடுகட்டி தரப்படவுள்ளது. கொல்லிமலை பகுதிவாழ் மக்களின் தொலை தொடர்பு வசதிகளுக்காக 13 செல்போன் டவர் அமைக்கப்பட்டுள்ளது.
கொல்லிமலையில் உள்ள அரப்பளீஸ்வரர் கோவில் கடை வாடகை நிர்ணயம் தொடர்பாக உள்ள பிரச்சனைகளை யாருக்கும் எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு உங்களின் நியாயமான கோரிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உரிய முறையில் பரிசீலினை செய்யப்படும். இந்து சமய அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகம் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்து சட்ட விதிகளுக்குட்பட்டு இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் குறைந்த பட்சம் வாடகை நிர்ணயம் செய்வது குறித்து ஆய்வு செய்யப்படும். அரசின் திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்தார்.
இன்றைய தினம் கொல்லிமலை பகுதிகளில் வசிக்கும் மகளிருக்கான பேருந்துகளில் கட்டணமில்லா விடியல் பயண சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மலை பகுதியில் உள்ள சோளக்காடு, செம்மேடு, வாசலூர்பட்டி, வெண்டலப்பாடி, விளாரம், அரிப்பலாபட்டி, பூந்தோட்டம், புதுவளவு, மேல்களிங்கம், தெம்பலம், ஓலையாறு, சுண்டக்காடு, நத்துக்குழிப்பட்டி, குண்டூர்நாடு, தேனூர்பட்டி, குழிவளவு, ஆரியூர்நாடு, கல்லேரி, செங்கரை, நரியன்காடு, மேக்கினிக்காடு, போல்காடு மற்றும் ஒத்தகடை என மொத்தம் 23 மலைக்கிராமங்களை சேர்ந்த மகளிர் மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவியர்கள் பயன்பெறுவார்கள்.
தொடர்ந்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், 60-வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கிட மூத்த குடிமக்களுக்கு இல்லம் தேடி மருத்துவ சேவை வழங்கும் வாகனம் தொடங்கி வைத்து, வாகனத்தின் மூலம் வழங்கப்படவுள்ள மருத்துவ வசதிகளை பார்வையிட்டு, வாகனத்தின் சிறப்பம்சங்கள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், ரூ.97.67 இலட்சம் மதிப்பீட்டில் செம்மேட்டில் புதியதாக திறந்து வைக்கப்பட்டுள்ள சார்நிலை கருவூலத்தை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து கழக துணை மேலாளர் (பணி) திரு.கலைவாணன், கோட்ட மேலாளர் (நாமக்கல்) திரு.எம்.சுரேஷ்பாபு, கிளை மேலாளர் திரு.மகேஷ்வரன், அட்மா குழுத்தலைவர் திரு.செந்தில் முருகன் உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்