Hot Posts

6/recent/ticker-posts

நாமக்கல் மாவட்டத்திற்கென பிரத்தியேகமாக ஒரு புதிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியை உருவாக்கிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டதற்கிணங்க நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உருவாக்கி அரசாணை வெளியீடு

நாமக்கல் மாவட்டத்திற்கென பிரத்தியேகமாக ஒரு புதிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியை உருவாக்கிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டதற்கிணங்க நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உருவாக்கி அரசாணை வெளியீடு” - பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தகவல்.

 நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (07.03.2024) பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், நாமக்கல் மத்திய கூட்டுறவு வங்கி குறித்த செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது 1997-ஆம் ஆணடு சேலம் மாவட்டத்திலிருந்து பிரித்து நாமக்கல் மாவட்டத்தை தனி வருவாய் மாவட்டமாக உருவாக்கினார்கள். நாமக்கல் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்ட பிறகு நாளது வரை தனியாக மத்திய கூட்டுறவு வங்கி தோற்றுவிக்கப்படாமல் இருந்தது.  
 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாமக்கல் மாவட்டத்தின் மக்கள் தொகை எண்ணிக்கை 17,26,601 ஆகும். 169 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் உள்ளிட்ட, பிற செயற்பதிவாளர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் சங்கங்களையும் சேர்த்து மொத்தம் 816 சங்கங்கள் இம்மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டம், கோழிப்பண்ணை, லாரி பாடி பில்டிங், முட்டை உற்பத்தி, விவசாயம், ஆமணக்கு எண்ணெய் பதப்படுத்தும் தொழில் ஆகிய பல முக்கிய தொழில்களுக்கு பெயர் பெற்றதாகும். 
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, சேலம் மாவட்டத்தில் 45 கிளைகள் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் 29 கிளைகள், என மொத்தம் 74 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் செயல்பாட்டு பகுதியில் உள்ள நாமக்கல் மாவட்டதிற்கென ஒரு புதிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி உருவாக்கிட வேண்டும் என்பது இம்மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கை ஆகும்.  
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாண்புமிகு அமைச்சர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டுறவாளர்கள், விவசாயிகள், கோழிப்பண்ணையாளர்கள் என அனைவரும் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அக்கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும், நாமக்கல் மாவட்ட விவசாயிகளின் நலன் கருதியும் மற்றும் பல்வேறு தொழில் துறையினர் பயன்பெறும் வகையிலும், பல்வேறு சிறப்புகளை கொண்ட நாமக்கல் மாவட்டத்திற்கென பிரத்தியேகமாக ஒரு புதிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியை உருவாக்கிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டதற்கிணங்க நேற்றைய தினம் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 
அதன் தொடர்ச்சியாக இன்று கூட்டுறவு சங்கங்களின் விதிகள்படி ஒரு கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட வேண்டும் என்றால் அதனுடைய உறுப்பு சங்கங்கள் சேர்ந்து கூட்டுறவு சங்கங்களுடைய துணை பதிவாளரிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டு அந்த விண்ணப்பம் முறையாக பதிவு செய்யப்பட்டு அதன்பிறகு தான் அந்த கூட்டுறவு சங்கம் செயல்பாட்டிற்கு வரும்.
 நாமக்கல் மத்திய கூட்டுறவு வங்கியை பொருத்தவரை இன்றைய தினம் நம்முடைய நாமக்கல் கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவுத் துறையின் துணை பதிவாளர் அவர்களிடத்தில் முதன்மை அமைப்பாளராக கொண்டு என்னுடைய விண்ணப்பம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களும் நாமக்கல் மத்திய கூட்டுறவு வங்கியிலே பதிவு செய்கின்ற வண்ணம் அந்த பணி இன்றைய தினம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க கூட்டுறவு சங்கங்கள் குறிப்பாக வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், விவசாய கூட்டுறவு சங்கங்கள் இவை அனைத்தும் பதிவு செய்த பிறகு சேலம் மாவட்டத்திலிருந்து நாமக்கல் மத்திய கூட்டுறவு வங்கி தோற்றுவிக்கும் போது முறையாக விண்ணப்பம் பதிவு செய்து அரசாங்கத்துடைய பரிந்துரையின்படி, நபார்டு வழியாக ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்று பின்னர், நாமக்கல் மத்திய கூட்டுறவு வங்கி என்பது தன்னுடைய செயல்பாட்டினை தொடங்கும். இப்பொழுது முதல் கட்டமாக ஆரம்ப கட்ட பணிகளை நாம் இன்றைய தினம் தொடங்கி இருக்கிறோம். ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்ற பிறகு நாமக்கல் மாவட்டத்திற்கு மத்திய கூட்டுறவு வங்கி செயல்படும்.
நாமக்கல் மாவட்டத்திற்கு மத்திய கூட்டுறவு வங்கி வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு அமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் அவர்களுக்கும், நாமக்கல் மாவட்ட மக்களின் சார்பாகவும், லாரி உரிமையாளர்கள், கோழி பணியாளர்கள், விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள் என அனைத்து தரப்பு மக்களின் சார்பாகவும் எங்களுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்