நாமக்கல் மாவட்டம், இராசிபுரம், ஆண்டகளூர்கேட் அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி விடுதியில் இன்று (08.3.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், அண்ணல் அம்பேத்கர் இளைஞர் மேம்பாட்டு திட்ட தொடக்க விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்வி மட்டுமே ஒருவரின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இல்லம் தேடி கல்வி திட்டம், அரசு பள்ளி மாணவ, மாணவியர்களின் பசியினை போக்கிடும் வகையில் காலை உணவுத்திட்டம், நான் முதல்வன் திட்டம், பெண்கள் உயர்கல்வி பயில மாதம் ரூ.1000/- வழங்கும் புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார்கள். புதுமைப் பெண் திட்டத்தில் அதிகளவில் மாணவியர்கள் பயன்பெற்று மாநில அளவில் நாமக்கல் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. அதுமட்டுமின்றி பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை மேம்படுத்திட தொழில் முனைவோர்களாக உருவாக்கிட தொழில் கடன், வங்கி கடன், கல்வி கடன் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. நாமக்கல் மாவட்டத்தில் உயர்கல்வி பயில கல்வி கடனுதவி வழங்கும் முகாம் 4 முறை நடத்தப்பட்டுள்ளது.
அண்ணல் அம்பேத்கர் இளைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கு உயர்கல்வி, தொழில் வழிகாட்டுதல் வழங்கப்படவுள்ளது. நம் மாவட்டத்தில் உள்ள தொழில் வாய்ப்புகளை பயன்படுத்தி, ஒவ்வொருவரும் தங்களை சிறு தொழில் முனைவோர்களாக மேம்படுத்தி கொள்ள வேண்டும். இதற்காக அரசு பல்வேறு தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறது.
லத்துவாடியில் ரூ.8.00 கோடி மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் நல கல்லூரி விடுதி கட்டப்படவுள்ளது. மேலும், மாண்புமிகு ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அவர்கள் மாணவ, மாணவியர்களுக்கு தங்கும் விடுதி அமைக்க மானிய கோரிக்கையில் அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்கள். மேலும், பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் தனது சொந்த நிதியிலிருந்து உதவித்தொகை வழங்கி உள்ளார்கள். இது மாணவ, மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வத்தை உருவாக்கிடும்.
மாணவ, மாணவியர்கள் செல்போன்களை நல்ல முறையில் தங்கள் கல்வி மேம்பாடு, சுய தொழில் தொடங்குதல் உள்ளிட்ட தகவல்களை அறிந்து கொள்ள மட்டுமே பயன்படுத்திட வேண்டும். தங்கள் பெற்றோர்களுக்கு பெருமை சேர்த்திடும் வகையில் தங்கள் வாழ்வில் உயர்நிலையை அடைந்திட வேண்டும். எனவே, மாணவ, மாணவியர்கள் அரசின் திட்டங்களை முறையாக பயன்படுத்தி கொண்டு தங்கள் வாழ்வை மேம்படுத்தி கொண்டு, தங்கள் பெற்றோருக்கும், ஆசிரியருக்கும், நம் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திரு.வெ.முருகன், நாமக்கல் மண்டல ஒருங்கிணைப்பாளர் (சேலம்) திரு.ச.சசி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.சு.சிவக்குமரன் (எ) கவிஞர் சீதைமைந்தன் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்