மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ”ஜனநாயக திருவிழா”
தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்வி நிறுவன வளாகத்தில் இன்று (07.03.2024) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், நாடாளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு ”ஜனநாயக திருவிழா” தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது,
நாமக்கல் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டம் சுமார் 17 இலட்சம் மக்கள் தொகை கொண்டது. கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்களார் பட்டியல் படி, சுமார் 14 இலட்சம் வாக்காளர்கள் உள்ளார்கள். நாமக்கல் மாவட்டத்தில் 1,628 வாக்குசாவடிகள் தயார் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் நகர்புறத்தில் 571, கிராமப்புறத்தில் 1,057 வாக்குசாவடிகள் தயார் செய்யப்பட்டுள்ளது. 687 அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அமைக்கப்படவுள்ளது. இவ்வாக்குசாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக சக்கர நாற்காலி மற்றும் சாய்வு தளம் அமைக்கப்படும், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, நிழற்கூட வசதி, நாற்காலி வசதிகள் ஏற்பாடு செய்யப்படும். தேர்தல் பணியில் ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் சுமார் 6 அலுவலர்கள், பாதுகாப்பிற்காக காவலர் நியமிக்கப்படுவார்கள். மேலும், 257 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதலாக மத்திய பாதுகாப்பு படை காவலர், நுண் பார்வையாளர் நியமிக்கப்பட்டு, வீடியோ மூலம் பதிவுகள் மேற்கொள்ளப்படும். நம் இந்தியா 140 கோடி மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாடு ஆகும். இளைஞர்களாகிய நீங்கள் சரியான முறையில் வாக்களிக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் தொடர் கண்காணிப்பு பணிகளுக்கு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, 24 மணிநேரமும் கண்காணிக்கப்படும். ஏதேனும் குற்றங்கள் இருப்பின் பொதுமக்கள் புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் வெளியிடப்படும். இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.
கே.எஸ்.ஆர் கல்லூரியில் பயிலும் 20,000 மாணவு, மாணவியர்களில் மட்டும் 7,500 பேர் வாக்காளர்களாக உள்ளனர். இந்தாண்டு 75 சதவிகிதத்திற்கும் மேல் வாக்கு பதிவு மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொரு வாக்கும் மிக முக்கியமானதாகும். இந்திய அதிகளவில் இளைஞர்களை கொண்ட நாடு, படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வருவதால் நல்ல தலைவர்களை உருவாக்கி தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி முன்னேற முடியும். தேர்தல் பணியில் சுமார் 8000 பணியாளர்கள் ஈடுபடவுள்ளனர். 80 வயதிற்கு மேல் உள்ள வாக்காளர்களை அவர்களது வீடுகளுக்கே சென்று வாக்கு பதிவு மேற்கொள்ளபடவுள்ளது. வெளி ஊர் மற்றும் மாவட்டங்களில் உள்ளவர்கள் தேர்தல் நடைபெறும் நாள் வரை, தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் படிவம் – 6 பதிவு செய்து வாக்காளர் அட்டை பெற முடியும். தேர்தலில் வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் எடுத்துரைக்கும் வகையில் தேசிய வாக்காளர் தினம் அனுசரிக்கப்பட்டு, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 18 வயதிற்கு மேற்பட்டவர்களின் விபர தரவுகள் அனைத்தும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே, 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் கட்டாயம் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
முன்னதாக, தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்து, அமைக்கப்பட்டிருந்த செல்ஃபி ஸ்டாண்டை பார்வையிட்டு மாணவ, மாணவியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
0 கருத்துகள்