மக்களவைத் தேர்தல் - 2024 முன்னிட்டு நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க பறக்கும் படைக் குழுக்கள் (FST), நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் (SST), வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் (VVT), வீடியோ பார்வைக் குழுக்கள் (VST);> கணக்குக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு வகையான பாதுகாப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், நாமக்கல் மாவட்ட எல்லைகளான எம்.மேட்டுப்பட்டி, மல்லூர், பவித்திரம் புதூர், பரமத்தி-வேலூர், பள்ளிபாளையம் உள்ளிட்ட உள்ளிட்ட பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள் இன்று (2.4.2024) பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பதற்றமான வாக்குச்சாவடிகள் ஆய்வு மேற்கொள்ள செல்லும் வழியில் இராசிபுரம் முதல் திருச்செங்கோடு செல்லும் சாலையில் வாகனங்களில் ஏற்றி வந்த சரக்குகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் வாகனங்களை முறையாக சோதனையிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
எனவே, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்குட்பட்டு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்களது பொருட்களை உரிய ஆவணங்களுடன் எடுத்துச்செல்ல வேண்டுமென மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த ஆய்வுகளில் திருச்செங்கோடு வட்டாட்சியர் திரு.விஜய்காந்த் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்