மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் மக்களவைப் பொதுத்தேர்தல் – 2024 முன்னிட்டு வாக்கு எண்ணும் மையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எளையம்பாளையம் விவேகானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லூரியில் இன்று (14.04.2024) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர்
ச.உமா, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ராஜேஸ் கண்ணன் இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் மக்களவைப் பொதுத்தேர்தல் – 2024 முன்னிட்டு வாக்கு எண்ணும் மையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மக்களவைப் பொதுத் தேர்தலை – 2024னை முன்னிட்டு நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட நாமக்கல், சேந்தமங்கலம், இராசிபுரம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, சங்ககிரி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்கள் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லூரியில் அமைக்கப்பட உள்ளன. இந்த மையங்களில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படவுள்ள பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் அறை, வேட்பாளர்களின் முகவர்கள், அரசு அலுவலர்கள் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வருவதற்கான பாதை அமைப்பு, பாதுகாப்பு வசதிகள், செய்தியாளர்களுக்கான அறை, முகவர்கள் மற்றும் காவல் துறையினருக்கான சி.சி.டி.வி (CCTV) அறை, உள்ளே வருவதற்கு மற்றும் வெளியே செல்வதற்கான வழிகள், குடிநீர், கழிப்பறை, மின்சார மற்றும் இணையதளம் உள்ளிட்ட வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி சே.சுகந்தி (திருச்செங்கோடு), துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பா.ம.இமயவரம்பன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரு.அ.தவமணி, திருச்செங்கோடு வட்டாட்சியர் திரு.விஜய்காந்த், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்