Hot Posts

6/recent/ticker-posts

மக்களவைத் தேர்தல் – 2024-ல் இந்தியாவிலேயே அதிக வாக்கு பதிவு பெற்ற மாவட்டமாக நாமக்கல் மாவட்டம் விளங்கிடும் வகையில் அனைவரும் வாக்களிக்க வேண்டும்

மக்களவைத் தேர்தல் – 2024-ல் இந்தியாவிலேயே அதிக வாக்கு பதிவு பெற்ற மாவட்டமாக நாமக்கல் மாவட்டம் விளங்கிடும் வகையில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் 
முதல் முறை வாக்காளர்களுக்கு வேண்டுகோள்.
*****
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலை கல்லூரியில் இன்று (2.4.2024) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மக்களவைத் தேர்தல் - 2024 முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் 
மருத்துவர் ச.உமா, இ.ஆப அவர்கள் தெரிவித்ததாவது,
இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் மக்களவை பொதுத்தேர்தல் 2024 மார்ச் 16 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அன்று முதல் நாமக்கல் மாவட்டத்தில் 100 சதவிகிதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் நாள்தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்தல் பொதுப்பார்வையாளர், தேர்தல் செலவின பார்வையாளர் மற்றும் தேர்தல் காவல் பார்வையாளர்கள் வருகைபுரிந்து பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேர்தல் நாளான 19.4.2024 அன்று தங்களது வாக்கு இடம் பெற்றுள்ள வாக்குச்சாவடிக்கு காலை 7.00 மணிக்கு சென்று தவறாமல் வாக்களிக்க வேண்டும். அதோடுமட்டுமல்லாமல் தங்களது உறவினர், நண்பர்களையும் வாக்களிக்க ஊக்குவிக்க வேண்டும். மக்களவை பொதுத்தேர்தல் 2024-ல் நாமக்கல் மாவட்டத்தில் முதல் முறை வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்கள் ஏறத்தாழ 24,000 நபர்கள் உள்ளனர். நாமக்கல் மாவட்டம் அதிகளவில் இளம் வாக்காளர்களை கொண்டுள்ள மாவட்டம் ஆகும். அனைவரும் தவறாமல் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும். 85 வயதிற்கு மேல் உள்ள மூத்தக்குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க அவர்களது வீடுகளுக்கே சென்று வாக்குபதிவு மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 7,169 நபர்கள் தபால் மூலம் வாக்களிக்க விரும்பம் தெரிவித்துள்ளனர். மேலும், 390 இந்திய இராணுவத்தில் பணியாற்றும் வாக்காளர்களுக்கு மின்னணு தபால் வாக்குச்சீட்டுகள் (ETPBS) அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 100 சதவிகிதம் வாக்களிப்பதை வழியுறுத்தி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் தேர்தல் அழைப்பிதழ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, இந்தியாவிலேயே அதிக வாக்கு பதிவு பெற்ற மாவட்டமாக நாமக்கல் மாவட்டம் விளங்கிடும் வகையில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். 
 நாமக்கல் மக்களவை தொகுதியில் 40 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளார்கள். அடுத்த 5 ஆண்டுகளுக்கு நமது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்திடும் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கும் உரிமை கடமை நம் அனைவருக்கும் உள்ளது. எனவே, வாக்குரிமை படைத்த அனைவரும் தவறாமல் தனது வாக்கினை செலுத்த வேண்டும். ஒவ்வொருவரின் வாக்கும் மிக முக்கியமானது. எனவே, வருகின்ற 19.4.2024 அன்று அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆப அவர்கள் தெரிவித்தார்.

முன்னதாக, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆப அவர்கள் தலைமையில் மக்களவைத் தேர்தல் - 2024 முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை கல்லூரி மாணவ, மாணவியர்கள் உட்பட அனைவரும் ஏற்றுக்கொண்டனர். மேலும், கல்லூரியில் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு முதல்முறை வாக்களிக்க உள்ள மாணவ, மாணவியர்களுக்கு வாக்கு பதிவு குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, தேர்தல் நாள் 19.4.2024 அன்று முதல் தலைமுறை வாக்காளர்கள் வாக்களிப்பதின் அவசியம் குறித்து மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் திரு.த.முத்துராமலிங்கம் (இராசிபுரம்), வட்டாட்சியர் திரு.சரவணன்  
உட்பட கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்