Hot Posts

6/recent/ticker-posts

நாமக்கல் மக்களவை தொகுதியில் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வாக்கு பதிவு 5.4.2024, 6.4.2024 மற்றும் 8.4.2024 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.

நாமக்கல் மக்களவை தொகுதியில் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வாக்கு பதிவு 5.4.2024, 6.4.2024 மற்றும் 8.4.2024 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் இன்று (4.4.2024) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மக்களவைத் தேர்தல் - 2024 முன்னிட்டு 85 வயதுக்கு மேற்பட்டவர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் (12d voters) வீட்டிலிருந்து வாக்களிக்கும் நிகழ்வில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது,

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் வரிசை எண்ணை அறிந்து கொள்வதற்காக புகைப்பட வாக்காளர் சீட்டிற்கு பதிலாக வாக்காளர் தகவல் சீட்டினை அச்சிட்டு வழங்க முடிவு செய்துள்ளது. வாக்காளர் தகவல் சீட்டில் வாக்குச் சாவடியின் பெயர், வாக்குப் பதிவு நாள், நேரம் போன்றவை இடம் பெற்றிருக்கும். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 1,628 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. வாக்குச் சாவடியில் வாக்காளர் தகவல் சீட்டு அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படாது. வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள், அவர்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக 12 வகையான மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது. 

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர் தகவல் சீட்டினை வழங்கும் போது வாக்களார் விபரங்களின் படி உரிய நபரிடம் சென்றடையும் வகையில் முறையாக சரிபார்த்து வழங்கப்படவேண்டும். வாக்காளர் இறந்திருக்கும் பட்சத்தில் அவரது வாக்களார் தகவல் சீட்டினை எக்காரணம் கொண்டும் வழங்கப்பட கூடாது. வாக்களார் தகவல் சீட்டினை வழங்கியதற்காக கையொப்பம் கட்டாயம் பெற வேண்டும். வாக்காளர்களின் வீட்டிற்கே சென்று வழங்கப்பட வேண்டும். பொது இடங்களிலோ அல்லது மொத்தமாகவோ வழங்கப்பட கூடாது. தேர்தல் பார்வையாளர்கள் இப்பணிகளை தீவிரமாக கண்காணிக்க உள்ளார்கள். எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணியினை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.

வருகின்ற 5.4.2024, 6.4.2024 மற்றும் 8.4.2024 ஆகிய நாட்களில் 85 வயதுக்கு மேற்பட்டவர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் (12d voters) விண்ணப்பம் அளித்தவர்கள் வீட்டிலிருந்து வாக்களிக்கலாம். வாக்களிக்க தவறியவர்கள் 8.4.2024 அன்று வாக்களிக்கலாம். மேற்படி வாக்குப்பதிவு அலுவலர் வருகை குறித்த தகவலை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வாக்காளர்களுக்கு முன்னரே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்திட வேண்டும். 

 வாக்குபதிவு நடைபெறும் போது அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட உள்ளது. இப்பணியில் ஈடுபடும் அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள் கவனமாக செயல்பட வேண்டும். 100 சதவிகிதம் வாக்கு பதிவு நடைபெறும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். வீட்டிலிருந்தே வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்தவர்கள் மட்டுமே மேற்கண்ட நாட்களில் வாக்களிக்க இயலும். 

நாமக்கல் மக்களவைத் தொகுதியில் 40 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதால் 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் (Ballot Unit) பயன்படுத்தப்படவுள்ளது. வாக்குப்பதிவின் போது வாக்களார்கள் சுதந்திரமாக தனது வாக்குகளை செலுத்திடும் வகையில் அனைத்து பணியாளர்களும் பணியாற்ற வேண்டும். 

இப்பணியில் ஈடுபடவுள்ள 285 வாக்குச்சாவடி மைய அலுவலர்கள் மற்றும் 64 மண்டல அலுவலர்களுக்கு வாக்கு அளிக்கும் நிகழ்வு மற்றும் வாக்குச்சாவடி சீட்டு (booth slip) வழங்கும் பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 130 மண்டல அலுவலர்கள் தலைமையில் வாக்குபதிவு குழு மூலம் மேற்படி வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அஞ்சல் வாக்குப்பதிவு செய்து வாக்குச்சீட்டுகளை பெறும் பணி நடைபெற உள்ளது. எனவே, மேற்கண்ட பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பயிற்சியில் கூறியபடி அனைத்து தேர்தல் விதிமுறைகளையும் பின்பற்றி சிறப்பாக பணியாற்றிட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் திரு.ச.பிரபாகரன் (சேந்தமங்கலம்), வட்டாட்சியர் திரு.சக்திவேல் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்