நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எளையம்பாளையம் விவேகானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லூரியில் இன்று (20.04.2024) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், தேர்தல் பொதுப்பார்வையாளர் திருமதி ஹர்குன்ஜித்கௌர், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ராஜேஸ் கண்ணன் இ.கா.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில், மக்களவை பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு 16.நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 1,661 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வாக்காளர்கள் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் இயந்திரம் (VVPAT) ஆகியவற்றினை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதியின் வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பு இருப்பறையில் வைத்து, முத்திரையிடப்பட்டதை பார்வையிட்டனர்.
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர்
மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது,
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 19.04.2024 அன்று நடைபெற்ற மக்களவைப் பொதுத்தேர்தல், 16.நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 92.இராசிபுரம், 93.சேந்தமங்கலம், 94.நாமக்கல், 95.பரமத்தி வேலூர், 96.திருச்செங்கோடு மற்றும் 87.சங்ககிரி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் 1,661 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது. அதன்படி, திருச்செங்கோடு வட்டம், எளையம்பாளையம் விவேகானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லூரியில் 16.நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, மக்களவைப் பொதுத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வாக்காளர்கள் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் இயந்திரங்கள் (VVPAT) ஆகியவை நாமக்கல் மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையமான விவேகானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு, மூன்று அடுக்கு பாதுகாப்புடன் தனி அறையில் சட்டமன்றத் தொகுதிவாரியாக வைக்கப்பட்டு, முத்திரையிடபட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையத்தினை கண்காணிக்க ஏதுவாக திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லூரியில் 310 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு எல்.இ.டி. தொலைக்காட்சிகள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட உள்ளது.
மேலும், திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் ஒரு ஷிப்ட்க்கு ஒரு வட்டாட்சியர் மற்றும் துணை இராணுவத்தினர் / காவல் துறையினர் என மொத்தம் 83 நபர்கள் வீதம் நாள் ஒன்றுக்கு 3 முறை என மொத்தம் சுழற்சி முறையில் 249 நபர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வேட்பாளர்கள், முகவர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.
0 கருத்துகள்