மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுரை
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (24.04.2024) கோடை காலத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுபாடின்றி விநியோகம் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:
நாமக்கல் மாவட்டத்தில் கோடை காலத்தில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நகராட்சி நிர்வாகம், பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 322 ஊராட்சிகளில் உள்ள பொதுமக்களுக்கு ஊராட்சியில் உள்ள சொந்த நீர் ஆதாரம் மற்றும் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்கண்ட ஊராட்சிகளில் 78.59 எம்.எல்.டி குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று மாவட்டத்தில் உள்ள 19 பேரூராட்சிகளைச் சேர்ந்த 294 வார்டுகளில் வசிக்கும் பொது மக்களுக்கு தேவையான குடிநீர் கூட்டு குடிநீர் திட்ட மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பேரூராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு 13.64 எம்.எல்.டி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்திலுள்ள 5 நகராட்சிகளைச் சேர்ந்த 153 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு நகராட்சி பகுதியில் உள்ள சொந்த நீர் ஆதார மற்றும் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நகராட்சி பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு 4.9 எம்.எல்.டி குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக வழங்கப்படும் குடிநீர் கடைகோடி குடியிருப்புகள் வரை சென்றடைவதை நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் ஆகியவற்றை சேர்ந்த அலுவலர்கள் களஆய்வு மேற்கொண்டு உறுதி செய்திடவும், குடிநீர் குழாய்களில் ஏற்படும் கசிவுகள், வெடிப்புகள் மற்றும் மின்மோட்டாரில் ஏற்படும் பழுதுகள் சரிசெய்யும் பணிகளை போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும், பாதுகாக்கப்பட்ட சீரான குடிநீர் தொய்வின்றி கிடைக்கவும் பணியாற்றிட வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் கோடை காலத்தில் சீரான குடிநீர் விநியோகம் வழங்கப்படுவதை தினசரி உறுதி செய்திடும் வகையில், குடிநீர் தேவைகள் நிறைவேற்றிடும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குடிநீர் பற்றாக்குறை ஏற்படா வண்ணம் சீரான அளவில் குடிநீர் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்சார வாரியத்தின் மூலம் கோடை காலத்திலும் மின்தடை இல்லாமல் வழங்க மின்வாரியம் மாற்று ஏற்பாட்டுடன் தயார் நிலையில் இருந்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.சு.வடிவேல், செயற்பொறியாளர் திரு.குமார், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் திரு.ராம்மூர்த்தி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.ரவிச்சந்திரன், கோட்டப் பொறியாளர் திரு.திருகுணா, நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்