நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் செயலாளர்
திருமதி. மகேஸ்வரி ரவிக்குமார், இ.ஆ.ப., அவர்கள் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் நகராட்சி, 8 பேரூராட்சிகள் – நாமகிரிப்பேட்டை, பட்டணம், சீராப்பள்ளி, ஆர்.புதுப்பட்டி, பிள்ளாநல்லூர், வெண்ணந்தூர், அத்தனூர், மல்லசமுத்திரம் மற்றும் இராசிபுரம், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை, புதுச்சத்திரம் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 523 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் மல்லசமுத்திரம், எலச்சிப்பாளையம் மற்றும் பரமத்தி (11 ஊராட்சிகள்) ஒன்றியங்களில் உள்ள 547 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் செயலாளர் திருமதி மகேஸ்வரி ரவிக்குமார், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் செயலாளர் அவர்கள் நீர் சேகரிப்பு கிணறு மற்றும் தலைமை நீருந்து நிலையம் நெடுங்குளம் காட்டூரில் உள்ள காவேரி ஆற்றில் அமைக்கப்பட்டு வருவதையும், நெடுங்குளம் காட்டூரில் அமைக்கப்பட்டு வரும் 76.14 எம்.எல்.டி நீர் சுத்திகரிப்பு நிலையத்தையும், எருமபட்டியில் புதிதாக கட்டப்பட்ட 32.60 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீரேற்று நிலையம், மல்லசமுத்திரத்தில் புதிதாக கட்டப்பட்ட 8.55 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீரேற்று நிலையம், இராசிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக இராசிபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட 23.50 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீரேற்று நிலையம், சீராபள்ளி பேரூராட்சி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 1.50 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் 1.80 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, மல்லசமுத்திரம் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக இராசிபுரம் கூட்டுக் குடிநீர் திட்ட பிரதான குழாயில் நீர் எடுக்கப்படும் இரண்டு இடங்களான மங்களம் மற்றும் காளிப்பட்டி ஆகியவற்றை பார்வையிட்டார். மேலும் மல்லசமுத்திரம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக எலச்சிபாளையம் ஒன்றியம் கொன்னையார் கிராம ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 3.00 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி, அகரத்தில் புதிதாக கட்டப்பட்ட 4.00 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீரேற்று நிலையம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். மேலும், மீதமுள்ள அனைத்து திட்ட பணிகளையும் விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தற்பொழுது இராசிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டமானது 66% பணிகள் முடிவுற்றும் மல்லசமுத்திரம் கூட்டுக் குடிநீர் திட்டமானது 90% பணிகள் முடிவுற்று இவ்விரு திட்டங்களும் நவம்பர் 2024-இல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வுகளின்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மண்டல தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் திரு.கூ.சீனிவாசன், மேற்பார்வை பொறியாளர் திரு.ஊ.மதியழகன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்