மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை.
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், எ.கே.சமுத்திரம், ஞானமணி கல்வி நிறுவனத்தில் இன்று (21.5.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ”என் கல்லூரிக் கனவு” உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை மேம்படுத்தவும், இடைநிற்றல் எண்ணிக்கையைக் குறைக்கவும், “என் கல்லூரி கனவு” என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் முன்னெடுப்பு திட்டம் வருடந்தோறும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பள்ளி இறுதி ஆண்டில் தேர்ந்தெடுத்த பாடங்களுக்கேற்ப உயர்கல்வி வழிகாட்டுதல், கல்லூரிகளை தேந்தெடுக்கும் முறை, விண்ணப்பம் பதிவு செய்வதற்கான உயர்கல்வி நிறுவனங்களின் இணையதள முகவரி, விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முறை, தேவையான சான்றிதழ்கள் குறித்து பல்வேறு துறை நிபுணர்கள் மூலம் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளில் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. அரசுப்பள்ளிகளில் பயில்வதை நாம் எந்தவிதத்திலும் குறைவாக கருத கூடாது. தனியார் பள்ளியில் பயின்றவர்கள் கூட கல்லூரி தேர்வு செய்யும் போது அரசு மருத்துவ கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரிகளை தான் தேர்வு செய்கிறார்கள். அந்த அளவிற்கு அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் திறமையான ஆசிரியர்கள் மூலம் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. போட்டி நிறைந்த உலகில் மாணவ செல்வங்கள் எவ்வித கவன சிதறலும் இன்றி, தங்களது கவனத்தையும், கருத்தையும் ஒருமித்து செலுத்தினால் மட்டுமே உயர்நிலையை அடைய இயலும்.
நாம் அனைவரும் சாதிக்க பிறந்தவர்கள். இன்றைய நவீன உலகம் பறந்து விரிந்தது. பல்வேறு வாய்ப்புகள் நிறைந்துள்ளன. செல்போன் உள்ளிட்ட நவீன கருவிகளில் உள்ள படிப்பு சார்ந்த நல்லதை மட்டும் நாம் எடுத்துகொண்டு நம் வாழ்க்கை பாதையை சிறப்பாக அமைத்து கொள்ள வேண்டும்.
அரசு பள்ளியில் பயின்ற மாணவ, மாணவியர்கள் மருத்துவம், பொறியியல், கால்நடை மருத்துவம், வேளாண்மை, சட்டம் உள்ளிட்ட படிப்புகளில் உயர்கல்வி பயில 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மேலும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தங்களின் திறனை மேம்படுத்தி கொள்ள கணினி பயிற்சி உள்ளிட்ட பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கல்லூரி கனவு எனும் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி மூலம் கிராமப்புறங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவ, மாணவியர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
மேலும், அரசின் சார்பில் படித்த மாணவ, மாணவியர்களுக்கு அரசு தேர்வுகளில் வெற்றி பெற இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி தங்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கிட பல்வேறு கடனுதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, அரசின் திட்டங்களை முறையாக பயன்படுத்தி கொண்டு தங்கள் வாழ்க்கையை சிறப்பாக அமைத்து கொண்டு தங்களது பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும், நம் மாவட்டத்திற்கும் பெருமை சேர்ந்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திரு.வெ.முருகன், மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலர் திரு.தே.பீட்டர் ஞானராஜ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் திரு.சதீஸ்குமார், உயர்கல்வி வழிகாட்டுபவர்கள் திரு.சு.ஹரிஸ், திரு.கோபி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்