Hot Posts

6/recent/ticker-posts

நாள்:11.6.2024நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 2,98,400 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

நாள்:11.6.2024
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 2,98,400 கால்நடைகளுக்கு 
கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது.  
மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

 நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், அணைப்பாளையத்தில் இன்று (11.6.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை மற்றும் பராமரிப்பு துறையின் சார்பில், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், 5-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் 10.6.2024 முதல் 30.6.2024 வரை 21 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த முகாமில் மாவட்டத்தில் 2,43,708 பசு இனங்கள், 54,692 எருமை இனங்கள் என மொத்தம் உள்ள 2,98,400 கால்நடைகளுக்கு 100 சதவீதம் முழுமையாக தடுப்பூசி போடப்படவுள்ளது.

தடுப்பூசி பணிக்காக மாவட்டம் முழுவதும் கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட 105 தடுப்பூசி குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் அந்தந்த கிராமங்களிலேயே கோமாரி நோய் தடுப்பூசி பணி மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விடுபட்ட கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம் 01.07.2024 முதல் 10.7.2024 வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. 

நாமக்கல் மாவட்டத்தில் 4- வது சுற்றில் நவம்பர், டிசம்பர் 2023ல் 2,98,000 மாடுகளுக்கு கோமாரி நோய்த் (Foot and Mouth Disease) தடுப்பூசிகளும், பிப்ரவரி 2024-ல் 15,710 கன்றுகளுக்கு கன்று வீச்சு நோய் (Brucella) தடுப்பூசி, 6,33,000 கோழிகளுக்கு கோழிக் கழிச்சல் நோய் (Ranikhet Disease) தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மார்ச் 2024-ல் 5,94,600 ஆடுகளுக்கு ஆட்டுக் கொல்லி நோய் (Peste des Petits Ruminentia - PPR) தடுப்பூசிகளும், ஏப்ரல் மாதத்தில் 1,240 பன்றிகளுக்கு பன்றி காய்ச்சல் (Swine Fever) தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வாரம்தோறும் சனிக்கிழமைகளில் கோழிகளுக்கு கோழிக் கழிச்சல் நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

கோமாரி நோய் இரட்டைக் குளம்பின கால்நடைகளை தாக்கி காய்ச்சல் மற்றும் கொப்புளங்கள் ஏற்படுத்தும் நச்சு உயிரி தொற்று நோய் ஆகும். பண்ணையில் சுகாதாரமற்ற பராமரிப்பு மற்றும் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், உமிழ்நீர் மற்றும் பண்ணைக்கழிவுகள் மூலம் இந்நோய் எளிதில் பரவுகிறது. கோமாரி நோயினால் கால்நடை வளர்ப்போருக்கு பெரும் இழப்பு நேரிடுகிறது. இக்கொடிய நோயை தடுக்கும் பொருட்டு கோமாரி நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 6 மாதங்களுக்கு ஒருமுறை அனைத்து மாட்டினம் மற்றும் எருமை இனங்களுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. எனவே, நாமக்கல் மாவட்ட விவசாய பெருமக்கள் மூன்று மாதத்திற்கு மேற்பட்ட கன்றுகள், பசு, எருது, எருமை ஆகிய கால்நடைகளை 30.6.2024 வரை அந்தந்த கிராமங்களில் நடைபெறும் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்களுக்கு கால்நடைகளை அழைத்து சென்று கோமாரி நோய் தடுப்பூசியினை போட்டு கொள்ளலாம்.  

 இம்முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குநர் மரு.ஈ.மாரியப்பன், கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்