நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், போடிநாயக்கன்பட்டி ஊராட்சி, கிராம ஊராட்சி சேவை மையத்தில் இன்று (4.7.2024) வேளாண்மை துறையின் சார்பில், கலைஞர் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான கிராம முன்னேற்ற பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கான வேளாண் வளர்ச்சித்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து, விவசாயிகளுக்கு மானாவாரி பயிர் மேலாண்மை பயிற்சி கையேடுகளை வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கல்குறிச்சி ஊராட்சியில் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பொட்டிரெட்டிபட்டி ஊராட்சியில் புதுக்கோட்டை சாலை முதல் சுப்ரமணியசாமி கோயில் வரை சாலை அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, சாலையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
போடிநாய்க்கன்பட்டி துணை சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு மருந்துப்பொருட்களின் இருப்பு, மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளின் வருகை விவரம், சுகாதார நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், நோயாளிகளுக்கான படுக்கை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், போடிநாய்க்கன்பட்டியில் நியாய விலைக்கடையில் பொது விநியோகப்பொருட்களின் இருப்பு, பொருட்களின் தரம் மற்றும் விலைக்கடையின் மூலம் பயன்பெறும் மொத்த குடும்ப அட்டைதாரர்கள் உள்ளிட்ட விபரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் பணியாளரிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
0 கருத்துகள்