நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள்
“ஊரகப் பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர்” திட்ட சிறப்பு முகாம்கள்
நடைபெற்று வருவதை பார்வையிட்டு பொதுமக்களிடமிருந்து
கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், மாணிக்கம்பாளையம், மேட்டுப்புதூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருமண மண்டபம் மற்றும் சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பச்சுடையாம்பட்டி, ஐஸ்வர்யம் மஹால் உள்ளிட்ட இடங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் இன்று (16.08.2024) நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு முழுவதிலும் மக்கள் அரசிடம் எதிர்பார்க்கும் எந்த ஒரு கோரிக்கையையும் விடுபடாமல் கனிவுடன் ஏற்று பரிசீலித்து உரிய முறையில் தீர்வு கண்டு மக்கள் அனைவரும் மனநிறைவுடன் வாழ்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை உறுதியுடன் மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டு, “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். அதன்படி, முதற்கட்டமாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் ”மக்களுடன் முதல்வர் திட்டம்” முகாம்கள் நடத்தப்பட்டு, முகாம்களில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது 30 நாட்களில் தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து இரண்டாம் கட்டமாக நாமக்கல் மாவட்டத்தில் ”ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம்” சிறப்பு முகாம்கள் 11.7.2024 முதல் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் 15 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 322 ஊராட்சிகளுக்கு 69 இடங்களில் "மக்களுடன் முதல்வர்" திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
இன்றைய தினம் மோகனூர் ஊராட்சி ஒன்றியம், வளையப்பட்டி, திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம், டி.கைலாசம்பாளையம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், அலவாய்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மாலை 3.00 மணி வரை மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. இப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி கொண்டு தனிநபர் கோரிக்கைகளான மின் இணைப்பு பெயர் மாற்றம், புதிய மின்னணு குடும்ப அட்டை, தொழில் கடன், பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறைகள் சார்பில் உதவித்தொகை, தாய் தந்தை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.4,000/- உதவித்தொகை, வேளாண்மை துறை சார்பில் சிறப்பு திட்டங்கள், வேளாண் இயந்திரங்களை குறைந்த வாடகையில் பெறுதல், தொழிலாளர் நலவாரிய அட்டை வேண்டிய மனுக்களை அளிக்கலாம். இம்முகாம்களில் மருத்துவ காப்பீட்டு அட்டை பதிவு செய்து பெறாத பொதுமக்கள் மருத்துவ காப்பீட்டு அட்டை பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். ரூ.5.00 இலட்சம் வரை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உயர்தர சிகிச்சைகள் பெறலாம்.”மக்களுடன் முதல்வர்”திட்ட முகாம்களில் பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் முகாம் நடைபெறும் இடங்களில் இ-சேவை மூலம் பதிவு செய்யப்பட்டு உடனடியாக பதிவு இரசீது வழங்கப்படும். மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களில் 15 துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெற்று 30 தினங்களுக்குள் தீர்வு காணும் வகையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
இந்த இரண்டாம் கட்டத்தில், ஊரகப்பகுதிகளில் மக்கள் பயன்பெறும் வகையில் “மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அதிகளவில் அணுகும் அரசுத் துறைகளான, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, எரிசக்தித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடுத் துறை, வேளாண்மை-உழவர் நலத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை உள்ளிட்ட 15 துறைகள் சார்ந்த 44 வகையான கோரிக்கைகள், 30 தினங்களுக்குள் தீர்வு காணும் வகையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இம்முகாம்களை பொதுமக்கள் தவறாமல் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில், மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டார்.
தொடர்ந்து, சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பச்சுடையாம்பட்டி, ஐஸ்வர்யம் மஹாலில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மின்சார வாரியத்தில் பெயர் மாற்றம் கோரி விண்ணப்பித்த 2 பயனாளிகளுக்கு உடனடியாக பெயர் மாற்றம் செய்து ஆணைகளை வழங்கினார்.
இம்முகாமில் அட்மா குழுத்தலைவர் திரு.தங்கவேல், தனித்துணை ஆட்சியர்
(சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.ச.பிரபாகரன், உதவி திட்ட அலுவலர் (வீடுகள்) திரு.பாலகுரு, வட்டாட்சியர் திரு.விஜயகாந்த், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.மணிகண்டன்,
திருமதி செல்வி, சேந்தமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி தமிழரசி திரு ஜெயக்குமார் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்