அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும் 180 மாணவியர்களுக்கு
கல்வி உதவித்தொகை வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 14.8.2024 அன்று நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் கனரா வங்கியின் மூலம் டாக்டர் அம்பேத்கர் வித்யாஜோதி உதவித்தொகை திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும் 180 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தாவது,
தமிழ்நாடு அரசு சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு அரசு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவ, மாணவியர்கள் பள்ளி படிப்பை தொடர்ந்து, உயர்கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாதம் ரூ.1,000/- வழங்கும் புதுமைப் பெண் திட்டம் மற்றும் தமிழ்புதல்வன் திட்டம், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவுத்திட்டம், நம் ஸ்கூல், நம் பெருமை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். மேலும், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கு போட்டி தேர்வுகள் மற்றும் உயர் கல்வி பயிலுவதற்கான அனைத்து வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலம் மற்றும் இராசிபுரம் பகுதிகளில் விடுதி செயல்பட்டு வருகிறது. எனவே, மாணவ, மாணவியர்கள் அரசின் திட்டங்களை பயன்படுத்தி கொண்டு தங்கள் கல்வியை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
அரசு பள்ளியில் 5 வகுப்பு முதல் 10 –ஆம் வகுப்புகளில் பயிலும் முதல் மதிப்பெண் பெற்ற பட்டியலின (SC/ST) மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த 180 மாணவியர்களுக்கு கனரா வங்கியின் பெரும் நிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதியில்(CSR), டாக்டர் அம்பேத்கர் வித்யா ஜோதி திட்டத்தின் கீழ், பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
டாக்டர் அம்பேத்கர் வித்யாஜோதி கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், 5,6,7-ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற 90 மாணவியர்களுக்கு தலா ரூ.3,000/-, 8,9,10-ஆம் வகுப்பு முதல் மதிப்பெண் பெற்ற 90 மாணவியருக்கு தலா ரூ.5,000/- கல்வி ஊக்கத்தகையாக வழங்கப்பட்டு, மாணவியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. மேலும், 102 மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கினார்.
கனரா வங்கியின் உதவித்தொகை திட்டம் 2013-2014 ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த 11 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 2023-24 ஆம் ஆண்டு வரை இந்திய அளவில் 95,000/- மாணவியர்களுக்கு ரூ.46.00 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. நடப்பு 2024-25 நிதி ஆண்டில் மட்டும், 44,742 மாணவியர்களுக்கு, ரூ.18.00 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ப.மகேஸ்வரி, கனரா வங்கியின் மண்டல அலுவலக துணைப் பொது மேலாளர் திரு.ஹெச்.மோகன், மாவட்ட முன்னோடி வங்கி இந்தியன் வங்கி மேலாளர் திரு.கே.முருகன், கனரா வங்கியின் முதன்மை மேலாளர்கள் திரு.கே.இராஜேந்திர ரெட்டி, திரு.என்.ஆர்.என்.இராஜேஷ், பள்ளி ஆசிரியர்கள், மாணவியர்கள், பெற்றோர்கள், கனரா வங்கி கிளை மேலாளர்கள், பணியாளர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்