மாணவியர்கள் நெகிழி (பிளாஸ்டிக்) ஒழிப்பை மக்கள் இயக்கமாக முன்னெடுக்க வேண்டும் - மாண்புமிகு சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர்
திரு. சிவ. வீ. மெய்யநாதன் அவர்கள் மாணவியர்களுக்கு அறிவுரை.
தமிழ்நாட்டின் காடு மற்றும் மரங்களின் அடர்த்தியை மாநிலத்தின் நிலப் பரப்பில் 33 சதவீதமாக உயர்த்துவதற்காக, தமிழ்நாடு பசுமை இயக்கத்தை அரசு ஏற்படுத்தவுள்ளது. தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் கீழ், பல்வேறு துறைகள், பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடனும், மக்களின் முழுஅளவிலான பங்களிப்புடனும், பலதரப்பட்ட நம் மண்சார்ந்த மரங்களை நடுவதற்கு பெரும் மரம் நடவுத் திட்டம் ஒன்று அடுத்த 10 ஆண்டு காலத்தில் செயல்படுத்தப்படும் என்று 2021-22ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் தமிழ்நாட்டில் வனப் பரப்பை அதிகப்படுத்தி, பசுமைப் போர்வையை விரிவுபடுத்தும் வகையில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் (4.9.2024) இன்று மாண்புமிகு சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர்
திரு. சிவ. வீ. மெய்யநாதன் அவர்கள், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு பசுமை இயக்கம் – 2024 ன் கீழ் 300 மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் 2022-2023ஆம் ஆண்டில் தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் கீழ் 3.70 இலட்சம் மரக்கன்றுகளும், 2023-2024 ஆம் ஆண்டில் 1.04 இலட்சம் மரக்கன்றுகளும் நடவு செய்யப்பட்டுள்ளன. இன்றைய தினம் நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் 300 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவிலில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தினை பார்வையிட்டு, செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து, நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு கலை கல்லூரியில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தடைசெய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுப்பொருள் பயன்படுத்துவது குறித்த கருத்துக்காட்சியினை மாண்புமிகு சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு. சிவ. வீ. மெய்யநாதன் அவர்கள் பார்வையிட்டு, கல்லூரி மாணவியர்களுடன் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், சுற்றுச்சூழல் பாதிப்புகள், கால நிலை மாற்றங்கள் குறித்தும், தடைசெய்யப்பட்ட பொருட்களுக்கு மாற்றாக இயற்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்றுப்பொருட்கள் பயன்படுத்துவது குறித்தும் கலந்துரையாடினார். தமிழ்நாடு அரசு சார்பில் இயற்கையை பாதுகாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும எடுத்துரைத்தார். மேலும், மாணவியர்கள் நெகிழி (பிளாஸ்டிக்) ஒழிப்பினை மக்கள் இயக்கமாக முன்னெடுக்க வேண்டுமென மாண்புமிகு சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு. சிவ. வீ. மெய்யநாதன் அவர்கள் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சிகளில் மாண்புமிகு மேயர் திரு.து.கலாநிதி, துணை மேயர் திரு.செ.பூபதி, மாவட்ட வன அலுவலர் திரு.ச.கலாநிதி, இ.வ.ப., மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (நாமக்கல்) திரு ரகுநாதன், மாநகராட்சி ஆணையாளர் திருமதி மகேஸ்வரி, நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் முனைவர்.மா.கோவிந்தராசு, வேளாண்மை இணை இயக்குநர் (பொ) திருமதி பொ. பேபிகலா, தோட்டக்கலைத் துணை இயக்குநர் திருமதி மா.புவனேஷ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) (பொ) திரு க.இராமச்சந்திரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்
0 கருத்துகள்