நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள்
பசுமை தமிழ்நாடு இயக்கம் 2-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு,
1,000 மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (24.9.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.மாதேஸ்வரன் முன்னிலையில், பசுமை தமிழ்நாடு இயக்கம் 2-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
தமிழ்நாட்டின் காடு மற்றும் மரங்களின் அடர்த்தியை மாநிலத்தின் நிலப் பரப்பில் 33 சதவீதமாக உயர்த்துவதற்காக, தமிழ்நாடு பசுமை இயக்கத்தை அரசு ஏற்படுத்தவுள்ளது. தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் கீழ், பல்வேறு துறைகள், பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடனும், மக்களின் முழுஅளவிலான பங்களிப்புடனும், பலதரப்பட்ட நம் மண்சார்ந்த மரங்களை நடுவதற்கு பெரும் மரம் நடவுத் திட்டம் ஒன்று அடுத்த 10 ஆண்டு காலத்தில் செயல்படுத்தப்படும் என்று 2021-22ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் தமிழ்நாட்டில் வனப் பரப்பை அதிகப்படுத்தி, பசுமைப் போர்வையை விரிவுபடுத்தும் வகையில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டு 2024 ஆம் ஆண்டு வரை சுமார் 4.74 இலட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
அதனைத்தொடர்ந்து இன்றைய தினம் பசுமை தமிழ்நாடு இயக்கம் 2-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, மாவட்ட வனத்துறை மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இணைந்து, நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.மாதேஸ்வரன் முன்னிலையில், 1,000 மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் திருமதி வெ.சாந்தி, மாவட்ட வன அலுவலர் திரு.ச.கலாநிதி, இ.வ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.இராமசந்திரன், முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ப.மகேஸ்வரி, கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குநர் மரு.ஈ.மாரியப்பன் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்